திங்கள், ஜூலை 27, 2009

எம்வீட்டு காளைகளே...

பசும்புல் நீங்க மேய
பாடநூல் நான் மேய்ந்து
பரீட்சையிலே பேர் வந்து
பல்லக்கிலே வேலை வந்து
உறவை தொலைச்சுப்புட்டு
நான் உட்காந்தேன் இங்கே வந்து -
உங்க நெனைப்பை தொலைக்கலேயே
நெனைச்சாலும் முடியலேயே

----
படிச்ச வயசில, பட்டிக்காட்டுல,
கட்டாந்தரையில, கரிசல் காட்டில,
உழத கட்டியில,
அருத்த வயலில, அடிச்ச கலத்தில,
வாய்க்கா வரப்புல,
புறகரையில, புல்வெளில,
பொங்கல் பூசையில, உங்க குளியலில.,
இப்படி ஒண்ணா ரெண்டா?
நாம் ஒட்டியிருந்த தருணங்கள்,
நீர் கொட்டிகொடுத்த நினைவலைகள்.

---
கட்டாந்தரையில, கவுந்து நீங்க ஓய்வெடுக்க,
கக்கத்துல ஒக்காந்திட்டு நெத்தி சொறிஞ்சிவிட,
நீங்க நெளிவாக தலை நீட்ட,
தொட்டு பரிமாறின நினைவு வந்து தலைகாட்ட,
இப்பவும் நீளுதுவேய் அனிச்சையாய் எங்கையி.
---
சண்டைக்காரன் பயிரோட சகவாசம் நீங்க வைக்க,
ஓங்கி அடிச்சிட்டாலும், ஒப்புக்கும் கோவிக்காம - எங்க
அப்பனுக்கு இருபொறப்பா, ஆத்தாலோட உடன்பிறப்பா,
உழைத்து உழைத்து எங்களை உலகத்திற்கு அனுப்பி வைத்து,
வெள்ளிக் கிழமை சந்தையிலே வெலையாகி போனமக்கா,
எங்கே இப்போ இருக்கியலோ, ஏரின்னும் இழுக்கிறியலோ,
நினைக்க பதைக்குதிய்யா நினைதுறந்த எம் உயிரு.
-------
கொட்டும் மழை ஒழுக,கொசுக்கடி ரணம் பெருக,
மூத்திர சகதியிலே,முழு இரவும் நின்ரீரே!
-----
உழைத்தே நைந்து போனீரோ - இல்ல
உலையிலே வெந்து போனீரோ
நினைக்க வேகுதய்யா நெஞ்சுநிலைகுத்தி போகுதய்யா.

----
உழைக்கத்தான் உம்பிறப்போ,
நீர் என்தாய் பெறாத உடன்பிறப்போ,
நீர் சளைச்சு நான் பார்த்ததில்ல, சம்பளமும் கேட்டதில்ல,
வாங்காத கூலிக்கு, வருசமெல்லாம் உழைச்ச உம்மை,
பெரிசா நெனைச்சதில்ல, பெருஞ்சிறப்பு செஞ்சதில்ல,
புரிஞ்ச இந்தப்புழு புண்ணியம் தெடிக்கொள்ள,
மறுபிறப்பு ஒண்ணு இருந்தா? மறக்காமல் நாம் பிறப்போம்,
உமக்கு நான் மாடாக, அல்லது, எமக்கு நீர் மக்களாக!

-- சாவண்ணா மகேந்திரன்