வியாழன், டிசம்பர் 07, 2023

ஆகையால் நாதக நாகாக்கக் கடவ.


அழுகி அவிழ்தலால் அழிகிறது அரசியல் புரட்சி, ஆகையால் நாதக நாகாக்கக் கடவ. 


கானச்சகிக்காத காக்கையின் கர்ச்சனையில் வன்குஞ்சாகும் பொன்குஞ்சை, வரம்புமீறும் வாய் கதைப்பை, வலிய வழியும் வக்கனையை இடித்துரைக்கும் கடிதம், இது நான் நிறப்பி அனுப்பும் படிவம்.

ஓர் அடிப்படை அரசியல் மாற்றடத்தின் கூவலும் கொக்கரிப்பும் ஒரே சித்தத்தில் இருத்தல் நன்று, ஒரே சத்தத்தில் இருத்தல் நன்றன்று. அடிவயிற்று வெப்பத்தை அடுத்தவரின் முகம் நோக்கிக் கக்கக்கூடாது, அதை அவர் அடிவயிற்றிற்கும் கடத்த வேண்டும்.  

ஆகையால், மானங்காக்க வந்தவனே, மேடைகளிலிருந்து மக்களை நோக்கிப் பாடு, தமிழர் மறைசுமந்து ஆடு, எச்சில் வந்தால் விழுங்கிவிடு, எதிர்ப் பதத்தின் முகமும் தமிழ் முகமே, இன மானம் காக்கும் இனம் உன் மொழி இனமே. ஆகையால் வாய் பேசு அண்ணாபோல், வாள் வீசு அண்ணன்போல்.

உயிர் மயிருக்குச் சமம் எனும் எண்ணம் விடு, உனக்கும் உதவாமல் செத்துப்போவாய்,  உன் ஒவ்வொரு மயிரும் ஒரு உயிருக்குச் சமம் என்று திண்ணம் நடு, உலகிற்கே உதவி செத்தும்வாழ்வாய். 

மயிர் நீப்பின் உயிர் வாழாத மான்பு கொண்டது உன் மானுடக்கதை, அதை மனதில் ஏற்றி மயிர் காக்கவேண்டும் உன் தமிழ்ச் சதை. 

வீரம் வாய்ச்சொல் இல்லை, வினைச்சொல். பாம்பின் கால் பாம்பறியும், பன்பின் வாள் பன்பறியும். ஆகையால் வீரம் பேசாதே, விவரம் பேசு! எரிந்து கத்தாதே, எதிர்த்துக்  கொத்து! 


மண் அழுத்த வெப்பத்தைத் தாங்காமல் எரிந்த பொருள் நிலக்கரியாகும், கனமான மான வெப்பத்தையும்  தாங்கி செரித்த பொருள் நிலவைரம் ஆகும். நீ என்னவாகப் போகிறாய் மண்ணின் மைந்தனே, மந்திரியாகவா? மானம் பாத்திரம்.
 
அனைவருக்கும் பொதுவான அரசியலில் ஆளுயரம் வளர்ந்த உனக்கு ஆட்சி அதிகார அரசியல் கதை சொல்ல அவரென்ன இவரென்ன எவரென்ன, அனைத்திற்குமான மக்களாட்சியில் தினம் வாழ்வில்  முக்கி முட்டையிடும் நீ என்ன உணருகிறாய்,  நீ என்ன சொல்கிறாய், நீ என்ன கொய்கிறாய் என்பதே அரசியல் மாற்றம். 

ஊசிப்போன உண்மைகளை,  ஊதிப் பெரிதாக்கி, ஊமையர்முன் உரக்கப்பேசி, உரிமையாக உள்நாக்கில் உல்லாசம் ஊறி, சுய உச்சம் அடைவது அல்ல அரசியல், ஊர் உள்ளே நீ நடந்து, உலக எல்லை நீ கடந்து, உடல் உதிரம் நீ வழிந்து, ஓர் ஊர்நன்மை கொணர்வது அரசியல்.

ஆகையால்,  அரசியல் சித்து விளையாட்டில் சிற்றின்பச்சந்திரனாக காயாதே, பேரின்பச்சூரியனாகக் காய். சொந்த சரக்கில் எரிவது சூரியன், பிறர் தந்த சரக்கில் ஒளிர்வது சந்திரன். 

ஊரின் உரிமை காக்க ஓடித்தேடி வந்தவனே, நீ ஒளிகொண்ட புலவனின் ஒன்றுவிட்ட வாரிசு, ஆகையால் உளியை எடுத்து ஒலியைக் கூட்டு, உன் ஒளியைக் காட்டு.  

மகுடம் வரினும், மலை வரினும், மற்றவன்போல் மனம் மாறி விடாதே. அரசியலுக்காக அறிவை இழக்காதே.

வாழ்த்துகளும் வாஞ்சைகளும்.
மஜெசா