Monday, December 13, 2010

அடுத்து என்ன செய்ய ....?

வீரம் மட்டுமல்ல விவேகமும் பேசுங்கள் உறவுகளே ...

நாம் கத்தியை தீட்ட தீட்ட எதிரி புத்தியை தீட்டுகிறான்,
தன் சக்தியை கூட்டுகிறான்..
அவன்  தன் உக்தியை மாற்றுகிறான் ...

கவனிக்க...
ஆம்,  கருவி உருவுவோம், கருவி உருவுவோம்
மக்கள் நலன் கருதி உருவுவோம்..

ஓங்கி அடிப்போம் எதிரி தலையில்
சம்மட்டியாலும், சமபுத்தியாலும் ...!

நம்செயலில் நிசமிருப்பதுபோல்
நியாயம் இருக்க செய்வோம் ...

ஆகையால்,
நிர்வாணமாக்கப்பட்ட நமக்கு தேவை நிதானம் ...
நிர்மூலமாக்கப்பட்ட நாக்கு தேவை நிதி மூலம் ...
வன்னிமண்ணில் நமக்கு தேவை தமிழ் வாண்டுகள்..
புத்தம் புதிய புலிக்குபிறக்கும் பூண்டுகள்..
இருபதாண்டுகளில் தேவை இரண்டு லட்சம் வேங்கைகள்..
வழிநடத்த, வணிகம் செய்ய, வரைமுறை படைக்க..

பெறுவோம் தெருவெங்கும் பிள்ளைகள் பத்து...
தேடுவோம் உலகெங்கும் அவைகளுக்கு சொத்து..
தருவோம் அவைகளுக்கு உணர்வும் ஊக்கமும்...

அடுத்து..
நாம் முடுக்க வேண்டியது ஈழத்தில் மூலதனம்...
நம் முடக்க வேண்டியது காடையரின் மூளைத்தனம்..
பத்தாண்டுகளில் பாதி வணிகம் ஈழத்தமிழன் தமிழன் கையில்...
பாதி  இலங்கை சொத்து உலகத்தமிழன் தமிழன் பையில்..
முடியாத வேங்கைகளை வளர்த்த வெளிநாடுவாழ் தமிழனுக்கு..?

அறுபது ஆண்டுகளில் கிட்டாத சுதந்திரம்,
இருபது ஆண்டுகளில் கிட்டும்,
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..

Monday, December 06, 2010

மழைத்தவளையாய்....கவிதைகள் பாகம் 3

நீதி மனு:
ஆறாம் வகுப்பில் அதிசயித்து,
ஏழாம் வகுப்பில் எட்டிபிடித்து,
எட்டாம் வகுப்பில் கூட்டாளியாகி,
ஒன்பதாம் வகுப்பில்  ஒன்றாய்படித்து,
பத்தாம் வகுப்பிலும் என்னை முந்திவிட்ட,
என் பால்ய வகுப்பறை தோழன்,
பழகியதொழில் செய்து பிழைக்கிறான்,
பட்டப்படிப்பிற்கு பணமில்லை என்பதாலும்,
பாட்டன்பெயர் பார்த்தசாரதி என்பதாலும்.

சந்தனச் சாணி:
வலியவன் கூட்டம் வாரியள்ளி பூசியது
சந்தனமும் சவ்வாதுமாய்,
எளியவன் நானுமள்ளி பூசினேன்
நாறியது நாய்விட்டையாய் சாதி ...

காந்தியும் கருவியும் ...

எம்மினம்காக்க ஏந்துவேன் எக்கருவியும்
காந்தி சொன்னார்
சிலை வைத்தார்கள்,

அவ்வினம் காக்க அவர் பேரன்
கத்தி  சொன்னான்
சிறை வைத்தார்கள் ...


வேங்கைகளும் ஆடுகளும் ...

கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியான்கிட்ட 
மணிக்கணக்கா  மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள்  வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை
வேங்கைகளின் சுரணையும் சுதந்திரமும்  ...!

Friday, October 22, 2010

இறையாண்மையும் ஒருமைப்பாடும் ஒன்றா ..?

இல்லை இல்லை,  இறையாண்மை என்பது வேறு, ஒருமைப்பாடு என்பது வேறு...

இறையாண்மை = இறை + ஆண்மை = ஆட்சியின் அதிகாரம் = அரசின் அதிகாரம் ...


ஒருமைப்பாடு = ஒருங்கிணைந்த வாழ்வு = வேறுபட்டாலும் நாமெல்லாம் ஒருவரே என்ற எண்ணம், சிந்தனை, செயல் ...

இந்த  வேறுபாடு தெரியாமலும் புரியாமலும் சிலர்  பெரும்பாலும்  "இறையாண்மை" என்ற சொல்லை "ஒருமைப்பாடு" என்ற சொல்லின் மாற்றுச்சொல்லாகவே உபயோகிக்கிறார்கள். அது ஒரு தவறான புரிதல் மட்டுமின்றி, தவறான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நாம்மை இழுத்துச்சென்றுவிடுகிறது.

 இறையாண்மைக்கு எதிராக பேச எல்லோருக்கும் உரிமையுண்டு. அது ஒருவருடைய பிறப்புரிமை, மக்களாட்சி தத்துவத்தின் உயிர் மூச்சு, ஞாயமான காரணங்களுக்காக அது சமுதாய கடமை. அரசாங்கம் அல்லது  ஆட்சியாளன் தவறான பாதையில் வழிநடத்தும்போதும், அதுபற்றி விமர்சிக்க, விளக்கம் கேட்க, எதிர்க்க, எதிர்க்க திரளமைக்க, ஆள் சேர்க்க, இப்படி எல்லா அம்சங்களுக்கும் மக்களாட்சியில் இடம் இருக்கிறது; இடமளிக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான இறையாண்மைமிக்க மக்களாட்சி.

ஆனால்  ஞாயமான காரணத்தோடு அரசை எதிர்ப்போரை ,அரசியல் காரணங்களுக்காக, சுயநல வாழ்விற்காக, கையாலாகாத ஆட்சியாளனின் அக்கப்போருக்காகவெல்லாம் சட்டத்தை ஏவி அடக்குவதும், ஒடுக்குவதும் இறையாண்மையன்று, அது ஒரு  குறையாண்மையே....

சரியான புரிதல் இல்லாமல், அவர் இறையாண்மைக்கு எதிராக பேசியதால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை,  அவர் ஒருமைப்பாடை போட்டு உடைத்துவிட்டார் என்று ஏதோ கொலைக்குற்றம் செய்ததுபோன்று புரிந்துகொள்வதும், ஆம் அவர் குற்றவாளி என்று கோவிப்பதும்,  மவுனமாக ஆமோதிப்பதும் ஒரு பொறுப்பற்ற செயலே.

பலர் இந்த புரிதலின்று தவறான முடிவெடுக்கிறார்கள், அவர்கள் இது குறித்து சிந்திக்கவேண்டும் தெளிவுபெறவேண்டும்  என்பதே நமது அவா.

இறையாண்மை , ஒருமைப்பாடு, மக்களாட்சி, பிறப்புரிமை - தெரிவோம் தெளிவோம் ...!   

 --

Saturday, October 16, 2010

காங்கிரஸ் ஆட்சி, காமராசர் ஆட்சி, கக்கன் ஆட்சி ...

ஒருதரம், இரண்டுதரம், மூன்றுதரம் என்று ஏலம் போடதகுறையாக காங்கிரஸ் கட்சி ஊரூராக  "தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி, காமராசர் ஆட்சி, கக்கன் ஆட்சி ..." என்று முழங்கியும் முனங்கியும் திரிந்தவண்ணம் இருக்கிறார்கள். ஓட்டுபோடும் மக்கள் ஒருவரும் பெரிதாக இதுபற்றி சிந்திப்பதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை. இருப்பினும், திடீரென்று செத்துப்போன கக்கனையும் காமராசரையும் தோண்டியெடுத்து வந்து பூஜிப்பதும், புல்லரிப்பதும் அடுத்த தேர்தளிலுள்ள அளவுகடந்த ஆசையின் காரணமாகத்தான் என்பது வெட்டவேளிச்சதில் கொட்டமடித்தாலும், தமிழக காங்கிரஸ் கங்காணிகள் வக்கணையாய் வாயிலேயே பொங்கல் கிண்டுகிறார்கள் வாக்காளனுக்கு.  இந்தமுறை எப்படியாயினும் எதைவித்தேனும் வரும் தேர்தலில் தேனும் தினைமாவும் தின்றுவிட தூண்டிவிடுகிறது காங்கிரஸ் தலைமை, எந்த திறமையும் தகுதியும் இறையாண்மையும் இல்லாத தமிழக காங்கிரஸ் கைத்தடிகள் ஆண்மைமிக்க கக்கனையும் காமராசனையும் களமிரக்குரார்கள் கையாலாகத்தனமாக.

 காமராசரை விடுங்கள், அவ்வப்போது சில மேடைகளில் சில  காங்கிரஸ் தலைவர்கள் காமராசர் பெயரை உச்சரித்ததுண்டு. ஆனால், இவர்கள் மருந்துக்கும் நினைவில்கொள்ளாதிருந்த கண்ணியவான் கக்கனை இன்று கொண்டாடுவதும் , நாம்முன் கொண்டுவருவதும் ஒரு மலிவான அரசியல் சூழ்ச்சியே. கிள்ளுக்கீரையாக தள்ளிவைக்கபட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை  உறிஞ்ச இந்த ஓநாய்கள் போட்டிருக்கும் திட்டம்.   அதிலொன்றுதான், தலித்துகளின் கூரைக்குள் தலைவர் ராகுல், சமபந்தி சாகசம் - அலங்காரம் செய்கிறது அரசியல், ஆச்சரியம் காட்டுகிறது தலைப்பு செய்தி;  இவையெல்லாம் மறைமுகமாய் மீண்டும் உறுதிபடுத்துகிறது அவன் கீழானவனென்று  இருப்பினும்  புரியாத வெள்ளந்தியான  மக்கள். அவர்தம் வாக்குகளை அபகரிக்க, அந்த  மக்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என இவர்கள் அப்பன்வீட்டு பணத்தில் செய்ததைபோலே, அரசாங்க பணத்தில் செய்ததை சொல்லிக்காட்டி பிழைக்கும் கட்சிகளின் வரிசையில் இவர்களும் இடம்பிடிக்கிரார்கள். எதைசொன்னால் ஓட்டு கிடைக்கும், எப்படி சொன்னால் ஓட்டு கிடைக்கும் என்று சிந்திக்கும் இவர்கள் போன்ற அரசியல்வாதிகளுக்கும், துணி இறக்கி நிற்கும் இரவுநேர ரம்பைகளுக்கும் என்ன வித்தியாசம்.

கக்கனை வழிகாட்டியாக வைத்து அரசியல் நடத்துகிறோம் என்று வாய்மொழியும் நிலையில் தகுதியில் இன்றைய காங்கிரஸ் வட்டாரத்தில் ஒருவருமில்லை. காமராசரின் ஆட்சியை இலக்கணமாக வைத்து ஆட்சி நடத்துவோம் என கூறி நடத்திக்காட்ட அறிவுள்ள, அழகுள்ள, ஆண்மையுள்ள ஒருவரேனும் இன்றைய காங்கிரஸ் வட்டாரத்தில் உண்டா? சுயமரியாதையோ, சுய சிந்தனையோ, இனமானமோ, தன் மொழி உணர்வோ, சுய மாநில விருப்பமோ, தன் மக்கள் நலமோ, கலாச்சார பாதுகாப்போ, சூடோ, சொரனையோ எதுவுமோ இல்லாத இன்றை காங்கிரஸ் கட்சியில் எவருக்கு தகுதியிருக்கிறது அடுத்த கக்கனாக,  அடுத்த காமராசராக வாழ , ஆள . இவர்களால், மைய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கங்காணி வேலைதான் செய்யமுடியும், வெளிநாட்டு வேம்புக்கு வெஞ்சாமரம்  வீசத்தெரியும்... கொள்ளிக்கட்டையை எடுத்து தலைசொரிய தெரியும்... தங்கமென்பதற்காக ஊசி எடுத்து தன் மக்களுக்கே தார் வைக்க தெரியும்... வேறென்ன தெரியும் இந்த வீனர்களுக்கு.

 ஜவகர்லால் நேரு தொடங்கி, இந்திராகாந்தி வந்து, ராஜீவ்காந்தி தொடர்ந்து, இப்போது அவர் மகன் ராகுல்காந்தி பிரதமராக இவர்கள் உழைக்கிறார்கள் ராவும் பகலும் - இவர்கள் அதில் பெறுவது வீரத்தளும்போ அல்லது வெறும் எழும்போ.. பாராளுமன்றத்தை அந்த ஒரு குடும்பத்திற்கு கொடுப்ப்திலேன்னவோ அவ்வளவு சுகம் காண்கிறது இந்திய சமுகம். மழுங்கிய மூளைகளுக்கு, இதுதான் மக்களாட்சியோ? 

வேடிக்கையாக  தோன்றுகிறது, சுதந்திர  போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மோதிலால் நேரு கொடுத்த பங்களாவின் பொருட்டு, இந்தியர்கள் பாராளுமன்றத்தையே  நேரு குடும்பத்திற்கு கொடுத்துவிட்டார்கள் என்று.


வெறுப்போடு வேதனையில் ஒரு கவிதை...

ஆட்சியாளன்,
நம்  பாட்டனுக்கு அவன் பாட்டன்,
நம் தாத்தனுக்கு அவன் தாத்தன்,
நம்  அப்பனுக்கு அவன் அப்பன்,
நமக்கு  அவன்,
இன்றைக்கும் ஆளும் அவன் வாரிசுகள்,
என்றைக்கு ஆளும் நம்  வாரிசுகளும்...?


என் கருத்தோடு காங்கிரசுவிற்கு ஒரு விண்ணப்பம்..

காங்கிரஸ் தோழர்களே...
உண்மையோடும் , உரிமையோடும்  ஊருக்குழைக்க உணர்வுமிக்க
ஒருவரை காட்டுங்கள் அல்லது கட்டுங்கள் என் தமிழ் சாதிக்கு முன்,
கக்கன் காமராசு என்ற கடவுள்களை காட்டி காரியம் சாதிக்கும்முன்...
தன் மக்கள் நலமும் மானமும் நித்தியமென நெத்தியிலேற்றுங்கள்,
மொழியும் இனமும் உணர்வும் சத்தியமென புத்தியை மாற்றுங்கள்,
பெரும் சேவையே தரும் பெரும் சாவையும் கக்கனைபோல், காமராசனைபோல்...

நிசம் புரிவீர்களா, நலம் புறிவீர்களா?
--

Monday, October 11, 2010

அவரும் அவனும் 2.0

கல்லுக்கும்  மண்ணுக்கும் மூத்த நம் தாய்த்தமிழை வளர்க்க, சங்கம் வைத்து பட்டி தொட்டிகளை எல்லாம் பைந்தமிழ் பாசறைகலாக்கிய காலம் தொட்டு  கலிபோர்னியாவில்  "தமிழ் அகடமி" வைத்து மொழிவளர்க்கும் முதிர்ச்சியுற்ற இக்காலம் வரையிலும் தமிழ் மொழிப்பாடத்தில் சமூக மேம்பாடு குறித்து பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை போலும்; தமிழ் எழுத்துவடிவ வளர்ச்சி மற்றும் பெரியார் செய்த சில வடசொல் நீக்கம் தவிர.

ஆம் தோழர்களே, ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் பாடநூல் ஆசிரியர்கள் விட்ட குறைகள் இன்றுவரை தொடர்வதுகண்டு வலியோடு எழுதுகிறேன்  என் வருத்தங்களை தெரிவிக்க சில மாற்றங்களை வருவிக்க...

அதாவது,  இன்றும் எழுத்திலும், பேச்சிலும் "மளிகை கடைக்காரர்" என்றும் "மாட்டு வண்டிக்காரன்" என்றும் ஏற்றத்தாழ்வை இன்னும் தொடர்கின்றோம். செய்யும் தொழில் சார்ந்து, குலம் (குளமும்) பிரித்து, மதில்கட்டி, மதிப்பளித்த மடமையை இன்னும் தொடர்கிறோம். ஒரு சிலரை தவிர, பெரும்பான்மையான மக்கள் இதுபற்றி சிந்திப்பதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை. ஆகையால், சாக்கடையைபோல, குப்பையைபோல, அசிங்கமான - அழகற்ற சொற்கள் தெருவில் குவிகின்றன...நோயை பரப்புகின்றன...

வெறுமனே வருமானத்திற்காக படைப்பாளிகள் செய்யும் துரோகம் மட்டுமில்லாமல், இக்குறை கல்வியிலும் தொடர்வதுதான் வேதனை. மேலும் சில கல்வி சார்ந்த ஊடகங்களிலும் இக்குறை காணப்படுகிறது. இக்குறை தென்படுபோதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களை நாம் அணுகியிருக்கிறோம். நீங்களும் ஆவன செய்வீர்களாக...

பேச்சு தமிழிலும், எழுத்து தமிழிலும் மரியாதையை குறிக்க அல்லது குறைக்க அவர், அவன், அவள் என்ற சொற்களை பயன்படுத்துவது இலக்கணம். இடம், பொருள், ஏவல் பொறுத்து அதை பயன்படுத்த நாம் கற்றுகொள்ள வேண்டும், அடுத்த சந்ததியினருக்கும் கற்றுதரவும் வேண்டும். குறிப்பாக பாடநூல்களில் மரியாதையான சொற்களே இடம்பெற வேண்டும். மகத்துவமற்ற வாக்கியம்யாவும் வழக்கொழிக்கப்பட வேண்டும், வருங்கால சந்ததியினர் வாய்மணக்க பேசவேண்டும், வள்ளுவன் புகழாய் வாழவேண்டும்...

அவரும் அவனும்
============
செய்யும்  தொழிலே தெய்வம் என்று தொல்தமிழ் கூறிநிற்க,
குணம் கெட்டு நாமும் அதை குலம்பிரித்து மதிப்பளிக்கலாமோ...
தமிழ் போதை ஏற்றும் எழுத்தினிலே பேச்சினிலே மனித பேதம் ஏற்றி பேசலாமோ...
தமிழ் பேதையர் தம் அறிவினிலே தவறான சொல்லேற்றி வைக்கலாமோ..
குலமேற்றும் குழந்தையர் தம் மனதினிலே குலம்பிரித்து வைக்கலாமோ...
அழகான குழந்தையினுள் அழகற்ற சொல் எதற்கு?
அறிவான குழந்தையினுள் அறிவற்ற சொல் எதற்கு?
அவர் இவர் என்ற அலங்கார சொல்லெல்லாம்
அழகென்போம், அறிவேன்போம்...
அவன் இவன் என்ற அகங்கார சொல்லெல்லாம்
அழிவென்போம், இழிவென்போம்...


நம்மை பொறுத்தவரை, மானசீக  மரியாதையுடன் திருப்புகழை மட்டுமல்ல தெருப்புளுவை பாடும்போதும் வாய் மணக்கும்...

(முன்பு எழுதிய சமத்துவபுர கவிதை ஒன்று..)

சமத்துவபுர கவி
==============

சமத்துவம் ஓதும் கவிஞன் நான் - அதை
போற்றி தொடுத்தேன் கவிதைஞான்
வந்து விழுந்தன ஒரேவரியில்
கவித்துவமான நல்வார்த்தைகளாய்
மளிகைக்கடைகாரரும்
கைவண்டிகாரனும்.

வருங்காலம் வண்ணங்களாகட்டும், வர்ண வாக்கியங்கள் வழக்கொழிந்து போகட்டும்...

--

Friday, March 26, 2010

மகனே வா... மறுபிறப்பே வா...

மகனே வா,
மறுபிறப்பே வா,
இயற்கை  எனக்களித்த
இன்னுமொரு வாய்ப்பே வா,
எழியவன் என்வழி வந்த
வலியவனே வா,
இனப்பெருமை ஏற்ற வந்த,
இன்னுமொரு  புலியே வா,
இடிதாங்கினும் இனம்காக்க
மடிதங்கியவனே வா,
எம்பேர் சொல்லவந்த
எம்பெருமானே வா,
எளியவன் நான் பிந்தும்
எல்லைகள் வெல்பவனே வா,
பெத்தவன் நானேந்தும்
பேராயுதமே வா,

எங்கப்பனிட்ட கட்டளைகள்
உங்கப்பனிடுகிறேன் கேள்,
மகனே கேள்,
மனிதராய் பிறந்தவர் பலர்,
மகானாய் இறந்தவர் சிலர்,
என் மகனாய் சென்று வா,
என் மகான் சிலர் வென்று வா....

அகிம்சையால் வென்ற காந்தியை,
அறிவியலில் வென்ற அயின்ஷ்டீனை,
ஆன்மிகம் வென்ற விவேகனை,
ஆசைகள் கொன்ற புத்தனை,
இலக்கியம் படைத்த கம்பனை,
இமயம் தொட்ட வரம்பனை,
ஈகையில் வென்ற தீரசிபியை,
ஈழத்தில் நின்ற வீரப்புலியை,
உண்மையை பேசிய சந்திரனை,
உரிமையை பேசிய சாகிப்பை,
ஊருக்கு உழைத்த  காமராசனை,
ஊமைக்கு  உரைத்த  ஈவேராவை,
எவனையும் கெஞ்சாத அம்மானை,
எமனையும் அஞ்சாத பொம்மனை,
ஏழையாய் வலம்வந்த கக்கனை,
ஏகாதிபத்யம் எதிர்த்த காரலை,
ஐயமற உரைத்த ஒளவையை,
ஐதீகம் உடைத்த லிங்கனை,
ஒளிகொண்ட புலவன் பாரதியை,
ஒப்பற்ற உரையாளன் அண்ணாவை,
ஒதிச்சென்ற அய்யன் வள்ளுவனை,
ஒளவை படைத்த ஆத்திச்சுடியை,
வென்றுவா.

இவரில் எவரேனும் வென்றுவா,
இல்லை இவர்பலரை தின்றுவா
என்தவம் தான்செய்தான்  இத்தந்தை 
எனும் இன்பமதை தா.

இந்நெறி நீ நன்செய்தால்.. 
இருக்கும்போதே எம்பேர் சாகும்,
இல்லாதபோதும் உம்பேர் வாழும்...


--
சாவண்ணா மகேந்திரன்

Wednesday, March 17, 2010

நித்தியானந்த நிசங்களும், நியாயங்களும்...

நித்தியானந்தா: ஆன்மிகத்தில் பல சாதனையும், ஆண்மையில் சில சோதனையும் நிகழ்த்தி நம்மை இப்போதும் வியப்பில் ஆழ்த்த தவறாத, அவரே ஒப்புக்கொண்ட, ஒரு சமூக சேவகர். இருப்பினும், நேற்றுவரை அவருக்கு கால் பிடித்த கூட்டம் இன்று அவருக்கெதிராக வாள் பிடித்து நிற்பது நம்மை ஒரு துளியும் வியப்பில் ஆழ்த்தவில்லை. "வடிவேல்: விடுங்க பாஸ், இவங்களுக்கு இதுதான் வேலை, இதெல்லாம் பார்த்த தொழில் செய்ய முடியுமா?".

நித்தியானந்தாவின் நீலப்படம் வெளியாகி ஊடகங்களுக்கும், ஊதரிகளுக்கும் நல்ல வருமானம் வாரித்தந்த நாள் முதல், எப்போதும் போல, நாலாபுறமும் இருந்து விமர்சனங்கள் விரிந்துகொண்டே இருக்கின்றன. இதில் "பிரிண்ட் குவாலிட்டி சரியில்லை, சவுண்ட் எபெக்ட் சரியில்லை என்ற வழிசல் விமர்சனங்களும் அடங்கும்.
 நேற்றைய தினம், நித்தியானந்தா அவர்கள் இதை அவரின் "ஆன்மிக ஆராய்ச்சி" என்றும், மக்களுக்கு பிடிக்கவில்லையென்றால் தான் இதை தொடரப்போவது  இல்லை எனவும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது; "வடிவேல்: ஆன்மிக ஆராய்ச்சியா? சொல்லவே இல்லை". அந்த பெண்மணியும் தான் அவர்பால் கொண்ட அன்பின் வெளிப்பாடாக, "சேவைதான் செய்தேன் அதிலென்ன தப்பு" என்று பெண்ணுரிமையோடு திமிருவது நம்ம ஊரு பழங்களுக்கும், கிழங்களுக்கும் ஏனோ கட்டெரும்பாய் கடிக்கிறது.

பகுத்தறிவு கூட்டம், வழக்கம்போல, அதுதான் "அப்பவே சொன்னோம்ல", இந்த சாமியாரு மட்டும் அல்ல எல்லா சாணியாருகளும் இப்படித்தான் என்று சகட்டு மேனிக்கு இந்துக்குளை சாடுவதொடு "இப்போதைக்கு  இந்தாளும்  இன்னும் சிலரும் மாட்டியிருக்கிறார்கள், மற்ற சாணிகளும் விரைவில் பிடிபடும். நல்ல வேலை வீடியோ வசதி புராண காலத்தில்  இல்லை, இருந்திருந்தால் முக்கடவுள்களின் பலான விசயமும், மொள்ளமாரிதனமும்  "uncensored"-ஆகா "insensible"-லா உலக நாயகர்கள் மட்டும் அல்ல, உள்ளூர் நாய்கள் வரை பொறாமைபடும் அளவிற்கு ஆகாய கப்பலில் ஏறி அடுத்தாத்து அம்புஜம் மாமிவீட்டு தொலைகாட்சியில் சிரிப்பா சிரிசிருக்கும்" என்று சிலாகித்து கொள்கிறது.



வேறென்ன சொல்லும், வீரஞ்செறிந்த கூட்டம். வெறும் வாயையே அந்த மெல்லு மெல்லுற கூட்டம், வெடகோழி விஷயம் கெடைச்சா வீருகொள்ளாதா என்ன? இந்துத்துவத்தை வேரறுக்க காத்திருக்கும் இந்த வீரர்படை, இவ்விசயம் கிழித்து  சந்து பொந்துகளிலெல்லாம் சமாரி ஒட்டுகிறது போஸ்டர். 


சரி, விவேக வேதாந்தி கூட்டமாச்சும் வெளிப்படையா பேசுதான்னா?, அதுவும் இல்லை. மறுபடியும் மறுபடியும் மண்ணை கவ்வியபின்பும் மதம் காக்க துடிக்கிறது மதிகெட்ட கூட்டம். முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது மட்டுமில்லாம, மதுரையை பிடிச்ச ராகு  கோபாலர், "இது, மதமாற்றத்திற்கு எதிராக இருந்த, இந்து மத காவலர் நித்தியானந்தாவை களங்கப்படுத்த பிற மதக்காரர்களின் சதி"-னு இந்த சனி வாய் தொறந்த நாத்தம் தாங்க முடியல. சும்மா இருக்குற ஓனான, இது எடுத்து காதுல சொருவிக்குது. அந்த ஓனான் கொடைய ஆரம்பித்து கத்தியை உருவுறதுக்குள்ள, இந்த களவானி ஓடி ஒளிஞ்சுக்கும் கருவரைக்குள்ள, கொலையாகிப்போறது என்னமோ குப்பனும் சுப்பனும்தான்.

வேறென்ன நியாயம் தெரியும் இந்த ராமகோமாதவிர்க்கு. "குற்றவாளி கூண்டில் ஏற்றி குணங்கெட்ட அவன் குடலை உருவு"-னு கோவப்பட இவர் என்ன குலோத்துங்கன் பரம்பரையா அல்லது இவரின் குலபெருமை காக்கும் கடவுள்கள்தான் ஏகபத்தினி விரதர்களா? இவர் காக்க நினைப்பது நித்தியானதாவை மட்டுமல்ல,  இவரின் நித்தியமான சுரண்டிதிங்கும் வாழ்வையும்தான்.  பரம்பொருளை பாடி பாடி வாயும் வயிறும் மனத்தவர் அல்லவா?  எவன் பரம்பரை அழிந்தாலும், இவருக்கு பரமனும், பக்தியும்  காப்பாற்றப்பட வேண்டும், இவரால்  மனக்க மனக்க பாட முடிய வேண்டும்.

அப்பிடி என்னதான் நித்தியானந்த புதுசா சாதிச்சு கிழிசிட்டுறாரு, சாமிகளும் மற்ற சாமியார்களும் சாதிக்காததை?  உண்மைதான், இவருக்கு முற்பட்ட சாமிகளும் சாமியார்களும் ஒன்னும் இவருக்கு சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் சாதனைகளும், சோதனைகளும் உமையாளின் பதினாறு கைவிரல் விட்டு எண்ணினாலும் பத்தாது. இருப்பினும் இவ்விளவயதிலேயே தனது ஆன்மிக யுக்தியால் இவ்வளவு வசதிகளை தன்வசப்படுத்தி தன்னாலான சமுக தொண்டுகளை செய்துவரும் இவரின் சாதனைகள் சற்று கவனிக்கப்பட வேண்டியதே.

ஒரு பெண்ணோடு உறவு கொண்டார் என்ற ஒரு அற்ப விசயம் நம்மை தடம்மாற்றி சிந்திக்கசெய்தால் அது நம்மிலுள்ள தெளிவற்ற சிந்தனைதான். இது அவரின் சொந்த உள்விவககாரம்,  மேலும் சம்மந்தப்பட்ட பெண்ணே தான் அவருக்கு செய்த சேவை என கூறும்போது சட்டம் கூட அவரை கேள்விகேட்க முடியாது என்பது நாமெல்லாம் அறிந்ததே. அவர் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்றோ, திட்டம் போட்டு ஏமாற்றினார் என்றோ ஆதாரமுள்ள குற்றசாட்டுகள் எழுந்தால் அறிவுசார்ந்த ஆராட்சியில் ஈடுபட்டு தெளிவுபடுத்துவது காவல்துறையின் வேலை; தண்டிப்பதும் தடுப்பதும் சட்டத்தின் வேலை.

அதைதவிர்த்து, இதுதான் சாக்கு என்று மொத்தத்தில் இந்து மதத்தின்மீது, இவர் பொருட்டு, சேர்வாரி பூசுவது தவிச்ச முயல் அடிக்கும் தவறான செயல். இல்லை இல்லை அவர் பெரிய யோகி,  இதெல்லாம் கிராபிக்ஸ் வேலை என்று கூறுவதும், அவர் தான் இன்னார், இப்படிப்பட்ட யோக்கியசாலி, இவ்வளவு சக்தி வாய்ந்தவன் என்று தன்னிபற்றி கூரகேட்டகாமல், தாங்களாகவே அவர் அப்படிபட்டவராம், இப்படிபட்டவராம் என்று தப்பார்த்தம் கொண்டு தறிகெட்டு போன தறுதலைகள், இப்போது எங்களை அவர் ஏமாற்றி விட்டார், எங்கள் மதத்தை அசிங்கபடுத்திவிட்டார் எனபதெல்லாம் குருட்டுத்தனமான செயல்.

இதே பாணியில்  தங்களை கடவுளின் சீடர்களாக கூறி வளமான தொழில் செய்யும் சில்லறை மற்றும் பன்நாட்டு பக்தி வியாபாரிகள் பலர் உள்ளார்கள், அவர்களெல்லாம் வெறும் ஆசாமிகளே. பக்தியால் பயமுறுத்தி  சிலைகளை பயன்படுத்தி சில்லறைகளை பறிக்கும் பெருந்தீனி திங்கும் இந்த கில்லாடிகள், அதன் பொருட்டு சிருதீனிகளை சிறு-மூளை கொண்ட பக்தகோடிகளுடன் பங்கிட்டுகொள்வார்கள். இவர்களும் ஒருவிதமான திருடர்கள்தான், அரசியல்வாதிகளை போல. அதிக கூட்டம், அதிக பணம். குறைந்த உழைப்பு, நிறைந்த வாழ்க்கை. மக்களின் முட்டாள்தனம், அவர்களின் மூலதனம் - இதுதான் அவர்களின் தாரக மந்திரம்.



இதே வேளையில், விசயங்களை வெளிகொனர்கிறேன் பேர்வழி என, நேரம் காலம் பாராமல், செய்தி மற்றும் படங்களின் தன்மை அறிவில்லாமல், முந்திக்கொண்டு கொடுத்தலே முக்கியம் என முறைகெட்டுப்போன ஊடகங்களின் முட்டாள்தனமான பொறுப்பற்ற சிந்தனைகளும் செயல்களும் மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, நித்தியானந்தாவின் வீடியோ காட்சிகளை, சிறுபிள்ளைகளுக்கு காட்டதகாத படங்களை முக்கிய நேரத்தில் ("prime time") பலமுறை, பலநாட்கள் ஒளிபரப்பி குடும்பங்களை நெளியவைத்த வக்கிரபுத்தி உள்ள நிலையங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சுழலில், நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் வெளியில் வந்து, இது எங்கள் சொந்த விசயம். அது எங்களின் நீலப்படம். அதை எப்படி நீங்கள் எங்களிடம் கேட்காமல் தொலைகாட்சியில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கலாம் எனக்கேட்டு சட்டத்தின் துணையோடு சில கோடி ரூபாய்களை நட்டஈடாக வாங்கி புரட்சி செய்தால் நாம் உண்மையாகவே அவர்களுக்கு தலைவணங்குவோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.

நம்மை பொறுத்தவரை "கேட்பவருக்கு எதுவும் செய்யாது கல்லாகிப்போன கடவுள்களைவிட, இவர்போன்று ஏதாவது செய்யும்  காமமாகிப்போன களவானிகள் உலவுவதில் தீமை குறைவுதான்..." 

மதம்பிடித்த மக்கள்  மதம் தெரிவார்களாக, மனம் தெளிவார்களாக!  

--
சாவண்ணா மகேந்திரன்