கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 08, 2011

மழைத்தவளையாய் ....பாகம் 4.

யார் தலைவன்
----------------------
யார் தலைவன்? பிரபலமாக பிழைப்பவனா,
பிறர் பலம் ஆகா உழைப்பவனா?
யார் தலைவன்? மக்கள் வெளிச்சத்தில் நிற்பவனா?
மக்களை வெளிச்சத்தில் நிறுத்துபவனா?
யார் தலைவன்? இனம் காக்க கம்பு தூக்குபவனா?
பணம் காக்க சொம்பு தூக்குபவனா?
யார் தலைவன்? ஊர்காக்க சாதித்து காட்டுபவனா ?
ஊழல்காக்க சாதியை காட்டுபவனா?
யார் தலைவன்? கோடிகோடியாய் கள்ள பணம் சேர்ப்பவனா?
தெருத்தெருவாய் நல்ல மனம் சேர்ப்பவனா.
யார் தலைவன்? புலியையும் புழுவாய் வளைப்பவனா?
புழுவையும் புலியாய் வளர்ப்பவனா?
யார் தலைவன்? கொடுமைகள் கண்டும் பொத்திக்கொண்டு இருப்பவனா?
கத்திக்கொண்டாவது இருப்பவனா?


மடையர் சாதி
--------------------
 
எங்கோ எவனோ எவனையோ வெட்ட
இங்கோ என்கழுத்திலும் கத்தி
நாம் அவனும் ஒரே சாதியென
எவனோ சொன்னதால்...

கருவறையும் கழிவறையும்
-----------------------------------------
கருவறையை கழுவுதலும்,
கழிவறையை கழுவுதலும்
பொதுமக்கள் வாழ்வை பேணும்
புனிதமான செயல் எனக்கொள்வோம்...


யார்  அல்ல, என்ன 
-----------------------------
கொள்கைகளே நாம் எதிர்ப்பது, கொண்டவர்களை அல்ல.
கருத்துக்களே நாம் விமர்சிப்பது, கருதியவரை அல்ல.
கலைகளே நாம் ரசிப்பது, கலைஞர்களை அல்ல. 
எழுத்துக்களே நாம் படிப்பது, எழுத்தாளரை அல்ல.



சுரனையும்  சுதந்திரமும் 
-------------------------------------------
கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியாதவன்கிட்ட
மணிக்கணக்கா மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள் வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை,
வேங்கைகளின் சுதந்திர வேகமும், தாகமும் ...!

எது கவிதை...
---------------------

நெடியில்லா சொல்லெடுத்து,
நேர்மையான கருத்துவைத்து,
சொற்சுவையும் பொருட்சுவையும்
சொட்ட சொட்ட தேன்போல,
செருக்கோடு கையளிக்க புலவன்
வாய்ருசித்து மெய்யுருகி
வாய்ச்சொல் ஏதுமின்றி,
மலங்கவைப்பது கவிதையா?

மடித்து மடித்து எழுதி,
மதிப்பில்லா கதைசொல்லி
மலங்கக்குவது கவிதையா,
இதுபோல்?

திங்கள், டிசம்பர் 06, 2010

மழைத்தவளையாய்....கவிதைகள் பாகம் 3

நீதி மனு:
ஆறாம் வகுப்பில் அதிசயித்து,
ஏழாம் வகுப்பில் எட்டிபிடித்து,
எட்டாம் வகுப்பில் கூட்டாளியாகி,
ஒன்பதாம் வகுப்பில்  ஒன்றாய்படித்து,
பத்தாம் வகுப்பிலும் என்னை முந்திவிட்ட,
என் பால்ய வகுப்பறை தோழன்,
பழகியதொழில் செய்து பிழைக்கிறான்,
பட்டப்படிப்பிற்கு பணமில்லை என்பதாலும்,
பாட்டன்பெயர் பார்த்தசாரதி என்பதாலும்.

சந்தனச் சாணி:
வலியவன் கூட்டம் வாரியள்ளி பூசியது
சந்தனமும் சவ்வாதுமாய்,
எளியவன் நானுமள்ளி பூசினேன்
நாறியது நாய்விட்டையாய் சாதி ...

காந்தியும் கருவியும் ...

எம்மினம்காக்க ஏந்துவேன் எக்கருவியும்
காந்தி சொன்னார்
சிலை வைத்தார்கள்,

அவ்வினம் காக்க அவர் பேரன்
கத்தி  சொன்னான்
சிறை வைத்தார்கள் ...


வேங்கைகளும் ஆடுகளும் ...

கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியான்கிட்ட 
மணிக்கணக்கா  மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள்  வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை
வேங்கைகளின் சுரணையும் சுதந்திரமும்  ...!

வெள்ளி, மார்ச் 26, 2010

மகனே வா... மறுபிறப்பே வா...

மகனே வா,
மறுபிறப்பே வா,
இயற்கை  எனக்களித்த
இன்னுமொரு வாய்ப்பே வா,
எழியவன் என்வழி வந்த
வலியவனே வா,
இனப்பெருமை ஏற்ற வந்த,
இன்னுமொரு  புலியே வா,
இடிதாங்கினும் இனம்காக்க
மடிதங்கியவனே வா,
எம்பேர் சொல்லவந்த
எம்பெருமானே வா,
எளியவன் நான் பிந்தும்
எல்லைகள் வெல்பவனே வா,
பெத்தவன் நானேந்தும்
பேராயுதமே வா,

எங்கப்பனிட்ட கட்டளைகள்
உங்கப்பனிடுகிறேன் கேள்,
மகனே கேள்,
மனிதராய் பிறந்தவர் பலர்,
மகானாய் இறந்தவர் சிலர்,
என் மகனாய் சென்று வா,
என் மகான் சிலர் வென்று வா....

அகிம்சையால் வென்ற காந்தியை,
அறிவியலில் வென்ற அயின்ஷ்டீனை,
ஆன்மிகம் வென்ற விவேகனை,
ஆசைகள் கொன்ற புத்தனை,
இலக்கியம் படைத்த கம்பனை,
இமயம் தொட்ட வரம்பனை,
ஈகையில் வென்ற தீரசிபியை,
ஈழத்தில் நின்ற வீரப்புலியை,
உண்மையை பேசிய சந்திரனை,
உரிமையை பேசிய சாகிப்பை,
ஊருக்கு உழைத்த  காமராசனை,
ஊமைக்கு  உரைத்த  ஈவேராவை,
எவனையும் கெஞ்சாத அம்மானை,
எமனையும் அஞ்சாத பொம்மனை,
ஏழையாய் வலம்வந்த கக்கனை,
ஏகாதிபத்யம் எதிர்த்த காரலை,
ஐயமற உரைத்த ஒளவையை,
ஐதீகம் உடைத்த லிங்கனை,
ஒளிகொண்ட புலவன் பாரதியை,
ஒப்பற்ற உரையாளன் அண்ணாவை,
ஒதிச்சென்ற அய்யன் வள்ளுவனை,
ஒளவை படைத்த ஆத்திச்சுடியை,
வென்றுவா.

இவரில் எவரேனும் வென்றுவா,
இல்லை இவர்பலரை தின்றுவா
என்தவம் தான்செய்தான்  இத்தந்தை 
எனும் இன்பமதை தா.

இந்நெறி நீ நன்செய்தால்.. 
இருக்கும்போதே எம்பேர் சாகும்,
இல்லாதபோதும் உம்பேர் வாழும்...


--
சாவண்ணா மகேந்திரன்

திங்கள், ஜூலை 27, 2009

எம்வீட்டு காளைகளே...

பசும்புல் நீங்க மேய
பாடநூல் நான் மேய்ந்து
பரீட்சையிலே பேர் வந்து
பல்லக்கிலே வேலை வந்து
உறவை தொலைச்சுப்புட்டு
நான் உட்காந்தேன் இங்கே வந்து -
உங்க நெனைப்பை தொலைக்கலேயே
நெனைச்சாலும் முடியலேயே

----
படிச்ச வயசில, பட்டிக்காட்டுல,
கட்டாந்தரையில, கரிசல் காட்டில,
உழத கட்டியில,
அருத்த வயலில, அடிச்ச கலத்தில,
வாய்க்கா வரப்புல,
புறகரையில, புல்வெளில,
பொங்கல் பூசையில, உங்க குளியலில.,
இப்படி ஒண்ணா ரெண்டா?
நாம் ஒட்டியிருந்த தருணங்கள்,
நீர் கொட்டிகொடுத்த நினைவலைகள்.

---
கட்டாந்தரையில, கவுந்து நீங்க ஓய்வெடுக்க,
கக்கத்துல ஒக்காந்திட்டு நெத்தி சொறிஞ்சிவிட,
நீங்க நெளிவாக தலை நீட்ட,
தொட்டு பரிமாறின நினைவு வந்து தலைகாட்ட,
இப்பவும் நீளுதுவேய் அனிச்சையாய் எங்கையி.
---
சண்டைக்காரன் பயிரோட சகவாசம் நீங்க வைக்க,
ஓங்கி அடிச்சிட்டாலும், ஒப்புக்கும் கோவிக்காம - எங்க
அப்பனுக்கு இருபொறப்பா, ஆத்தாலோட உடன்பிறப்பா,
உழைத்து உழைத்து எங்களை உலகத்திற்கு அனுப்பி வைத்து,
வெள்ளிக் கிழமை சந்தையிலே வெலையாகி போனமக்கா,
எங்கே இப்போ இருக்கியலோ, ஏரின்னும் இழுக்கிறியலோ,
நினைக்க பதைக்குதிய்யா நினைதுறந்த எம் உயிரு.
-------
கொட்டும் மழை ஒழுக,கொசுக்கடி ரணம் பெருக,
மூத்திர சகதியிலே,முழு இரவும் நின்ரீரே!
-----
உழைத்தே நைந்து போனீரோ - இல்ல
உலையிலே வெந்து போனீரோ
நினைக்க வேகுதய்யா நெஞ்சுநிலைகுத்தி போகுதய்யா.

----
உழைக்கத்தான் உம்பிறப்போ,
நீர் என்தாய் பெறாத உடன்பிறப்போ,
நீர் சளைச்சு நான் பார்த்ததில்ல, சம்பளமும் கேட்டதில்ல,
வாங்காத கூலிக்கு, வருசமெல்லாம் உழைச்ச உம்மை,
பெரிசா நெனைச்சதில்ல, பெருஞ்சிறப்பு செஞ்சதில்ல,
புரிஞ்ச இந்தப்புழு புண்ணியம் தெடிக்கொள்ள,
மறுபிறப்பு ஒண்ணு இருந்தா? மறக்காமல் நாம் பிறப்போம்,
உமக்கு நான் மாடாக, அல்லது, எமக்கு நீர் மக்களாக!

-- சாவண்ணா மகேந்திரன்

புதன், ஏப்ரல் 22, 2009

மழைத்தவளையாய்....2

தீவிரவாதம்
~~~~~~~~
பசித்த குழந்தை
பால்வராத முலைகடித்ததா
தீவிரவாதம்?




பார்வை போதும்
~~~~~~~~~~~~
கண்கள் மட்டும் சந்தித்துவிட்டால்
கழுதைக்கும் மலரும் காதல்
காக்கையின் மீதும்!



நிழலின் அருமை
~~~~~~~~~~~~
கடன் வாங்கி
கப்பம் கட்டி
டியூசன் வைத்து
உறவின்முன் பேசவைத்து
வெள்ளைமொழி கேட்டு மகிழ்ந்தார் அப்பா.

வாத்தியார் தேடிச்சென்று
வரிசையில் தெருவில் நின்று
விடுமுறையில் நடைமுறை கண்டு
விருந்தின்முன் பேசச்சொல்லி
பிள்ளைத்தமிழ் கேட்டு மகிழ்கிறேன் நான்.

கலிபோர்னியா வெயிலில் தெரிகிறது
நிழலின் அருமை!



கோழைத்தனம்
~~~~~~~~~~
உரிமை கேட்டு உருமும் எமை
முடக்கும் மும்முரத்தில் மறந்துவிட்டாய்
பல்லிளிக்கும் உன் கோழைத்தனம் மறைக்க!



குறையாண்மை
~~~~~~~~~~
உரிமைகேட்டு ஊரைக்கூட்டுபவன்
கேள்வியின் பதிலுக்கு கையாலாகாமல்
இறையாண்மை பேரைச்சொல்லி சிறையிலிடுகிறது
குறையாண்மை கூட்டம்.

புதன், டிசம்பர் 31, 2008

புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

புதிய ஆண்டு பிறப்புக்கள் நாம் கொண்டாட, சுயதிரனாய்வு செய்துகொள்ள, பழையன கழிக்க , புதியன புகுத்த, மேம்பாடுகள் திட்டமிட என அவரவர் தேவைக்கேற்றபடி பல வாழ்வியல் மாற்றங்களை செய்துகொள்ள வளர்ந்துவந்த நாகரீகம் நமக்களித்த பரிசு. சான்றோருக்கு இதுபோன்ற சாக்குபோக்குகள் தேவையில்லைதான், எனினும் சாமானியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பே அவர்தம் வாழ்வை வரையறுக்க. அத்தகைய இத்திருநாளில் நலம்பேணும் சிலபல நற்கொள்கைகளை நாம் நாடியேர்ப்போமாக.

பன்னிரண்டு மாதங்கள் கழித்து வாய்க்கும் இவ்வாய்ப்புக்கள் இன்னும் குறுகிய காலங்களில் கிடைக்குமானால் வாழ்வியல் திருத்தங்கள் இன்னும் திரன்மிக்கதாய் அமையும் என்பது நமது கருத்தாகும். இருப்பினும் அறுபது மதங்கள் கழித்தே கிடைக்கும் அரசியல்மாற்ற வாய்ப்பு போன்ற அவல நிலை இதற்கில்லை என நாம் ஆருதலடைகிறோம் . இனிவரும் புதிய ஆண்டுகளும், அதுபடைக்கும் புதிய தலைமுறைகளும் இந்நிலையை திறனாய்வு செய்வார்களாக.

2008- ஆம் ஆண்டு சிறப்பானதாக கருதி அது 366 நாட்கள் மற்றும் 1 வினாடி துளிகளாக கணக்கிடப்பட்டு உலக பொது கடிகாரங்களும் சரிசெய்யபட்டுவிட்டன. பூமிப்பந்தின் வேகம் குறைந்துவிட்டதெனவும், இதுதொடர்ந்து எதிர்கால சந்ததியினர் நடுநிசியில் சூரியன் பார்ப்பார் எனவும், எதிர்காலநலன் நேக்கிய இம்மாற்றத்தின் தேவையை அறிவியல் ஆராந்து தெரிவித்துள்ளது. இது காலத்தின் கட்டாயம், வழிவிடவேன்டியது நம் பொறுப்பு. 2009- ஆம் ஆண்டும் பெருந்தன்மையுடன் ஒரு வினாடியை 2008- ஆம் ஆண்டிற்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. நாமும் இந்த நற்பண்பை பெறுவோமாக.

நம்மை புதுப்பிக்கும் இப்புத்தாண்டு தம்மையும் புதுப்பிக்குமாக, இதை செவியேற்குமாக....

போர்கோலம் பூண்டிருக்கும் இந்த பூவுலகில்
புதுக்கோலம் வரைவாயா புத்தாண்டே
அலங்கோலம் அடைந்திருக்கும் எம்மக்கள்
தனிநிலங்கான உரைப்பாய புத்தாண்டே
கடுங்காவல் பெறுகின்ற எம்தொண்டர்
விடுங்காலம் விரைவாக தருவாயா
நெடுங்காலம் சேர்ந்திருந்த என்நாடு
ஒருக்காலும் உடையாமல் தடுப்பாய
களம்பல திருடும் கயவர்தம்மை
நிலம்தின்ன விரைவில் கொடுப்பாயா
யுகம்பல கடந்த எம்மொழி - புது
திறம்பல பெற அருள் புரிவாயா
தடம்பல பெற்ற எம்வரலாறு - உலகின்
இடம்வலம் பெருக ஏற்பாயா
குணம்பல குறுகிய என்நாட்டு
சனம்சில திருந்திட புலன் தருவாயா
பணம்பல பெருகிய மனிதர்தம்
மனம்தர மலரச்செய்வாயா
திடம்பல உறைந்த எந்நெஞ்சில்
மடம்சில மறைய எரிப்பாயா
சினம்பல எரியும் என்சிந்தையில்
உரம்பல விதைத்து வளர்ப்பாயா
புத்தாண்டே.

இப்புத்தாண்டில் உருதிபல நீர் ஏற்று, சுருதி மாறாமல் நிறைவேற்றி, தகுதிபல வளர்த்துக்கொள்ள வாழ்த்தி விடைபெறுகிறோம்.

எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
---
சாவண்ணா மகேந்திரன்




வியாழன், நவம்பர் 13, 2008

மழைத்தவளையாய்...

திமிர்
===
நீ விட்டெறிந்ததை
தட்டேந்தாத எனை
திமிர் எனுமோ
உன் திமிர்


சமூக கந்தல்
=========
மூடைமூடையாய் துணியிருந்தும்
எப்போதும் கந்தலுடன்
எம் வண்ணானின் மகள்.

சமத்துவபுர கவி
==============
சமத்துவம் ஓதும் கவிஞன் நான் - அதை
போற்றி தொடுத்தேன் கவிதைஞான்
வந்து விழுந்தன ஒரேவரியில்
கவித்துவமான நல்வார்த்தைகளாய்
மளிகைக்கடை காரரும்
கைவண்டி காரனும்.

ஓர் மனப்பிரளயம்
================
எரியும் பூமி
உருகும் பனிமலை
சரியும் சந்தை
பெருகும் மந்தை
சுருங்கும் நிலம்
நிலத்தை பிரிக்கும் கோடுகள்
அதனால் விளையும் கேடுகள்
மொழியால் பிளவுபடும் தேசியம்
தேசியத்திற்கு பலியாகும் செம்மொழி
ஜாதிசதியால் கிளிபடும் மனிதம்
மனிதனால் வலுப்பெறும் ஜாதிவெறி
மனம் ஒவ்வாத இனகலப்பு
மானம் மழுங்கடிக்கும் நாகரீகம்
ஊரை சுற்றும் சாக்கடை
உயர உயரும் வேலிச்சுவர்
சுற்றி திரியும் சோம்பேறி
சுயநலம் போற்றும் சம்சாரி
சுருட்ட துடிக்கும் வியாபாரி
தன்மானம் இல்லாத அதிகாரி
தரித்திரம் படைக்கும் அரசியல்
சரித்திரம் படைக்கும் விலைவாசி
விவரம் அறியா எம்மக்கள்
விருந்தை விசமாக்கும் எம்தலைவன்
தனித்தே செயல்படும் ஒரே கொள்கை
தமிழரே படிக்காத தமிழ் கொள்கை
......
.......
இதுபோல் பிரச்சினை என்றும் பலபல
இன்னும் அடங்கா இச்சைகள் சிலபல
எதனை எப்படி களைந்தெறிவேன்
எல்லாம்வல்ல நான் முதலில்...

--
சவண்ணா மகேந்திரன்