ஞாயிறு, மே 20, 2012

பொறியும் கேள்விகளும், பெரியாரியல் பதில்களும்.

கேள்வி: நீங்கள் யார், எழுத்தாளரா, பேச்சாளரா?
பெரியார்: கருத்தாளன்.

கேள்வி: உங்கள் கொள்கை கடவுள் மறுப்பா, பார்ப்பனர் வெறுப்பா, ஆரியர் எதிர்ப்பா, சாதி ஒழிப்பா?
பெரியார்: ஆதிக்க தகர்ப்பு.

கேள்வி: உங்களில் முரண்பாடுகள் தெரிகின்றனவே?
பெரியார்: அது முரண்பட்டவர் பார்வை.

கேள்வி: தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியா?
பெரியார்: ஆம் வயதிலும், வசதியிலும்.

கேள்வி: கடவுளை கற்பித்தவன் முட்டாளா, பரப்பியவன் அய்யோக்கியனா, வணங்குகிறவன் காட்டுமிராண்டியா?
பெரியார்: ஆம், காட்டுமிராண்டிகள் பயந்து முட்டாள்களால் கற்பிக்கப்பட்டு அய்யோக்கியர்களால் பரப்பப்பட்டதுதான்  கடவுள்.

கேள்வி: நீங்கள் என்ன மகா புத்திசாலியா, அறிஞரா, ஞானியா?
பெரியார்: நாளைய காட்டுமிராண்டி.

கேள்வி: நீங்கள் உபதேசிப்பது?
பெரியார்: என் உபதேசங்களையும்  அப்படியே  ஏற்காதீர். சுயசிந்தனைக்கு உட்படுத்தவும்.

கேள்வி: மக்களை நெறிப்படுத்த கடவுள், மதம், சொர்க்கம், நரகம் தவிர்த்த பாதை எது?
பெரியார்: தன்மானமும் சுயசிந்தனையும்.

சனி, மே 19, 2012

மழைத்தவளையாய் ....பாகம் 5


இரண்டாயிம் வருடம்  
ஆண்ட பெருமையில் மறந்தோம்
இருநூறு வருடம் 
பின்தங்கிய இழிநிலையை.

=====================

பரம்பரை பரம்பரையாய் 
அள்ளியும் மாளவில்லை 
வாழையடி வாழைகளின் 
வாழ்வியல் குப்பைகளை.
=====================

இது என்ன கனவு 
இப்படி வதைக்கிறதே 
இருளும் மிரளும் இக்கொடூர கனவில்   
ஓடிப்போக முயற்சிக்கிறேன் 
அசையக்கூட முடியவில்லை
ஓலமிட முயற்சிக்கிறேன்
முனங்ககூட முடியவில்லை
ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறேன்
ஒரு இடத்திலும் பாதுகாப்பு இல்லை
கைநீட்டி சகாக்களை எழுப்ப நினைக்கிறேன்
அது வாய்க்கு எட்டுமளவே கட்டப்பட்டுள்ளது 
மூச்சு முட்டுகிறது நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
கைகொடுக்க யாருமில்லை கடைசியாய் ஒரு நினைப்பு
கனவிலிருந்து விடுபட கடைசிவழி விழிப்பு ஒன்றே
விழிக்க எத்தனித்து இமை பிரிக்க முயற்சிக்கிறேன்
அய்யகோ அதுவும் முடியவில்லை
என்ன இழவுக்கனவு இது?
அசரீரி சிரித்தது,
இது ஒரு இந்தியக்  கனவு.
=====================

பெரியோர்களே தாய்மார்களே 
இவனும் அவனாகிப்போனதால் 
அடுத்த தேர்தலுக்கு காத்திருப்போம்
நப்பாசையிலும்
சப்பையாசையிலும்.

=====================

விம்மிய வார்த்தைகளில்
விளம்பிய கேள்விகளை
விளங்கிடா வீனர்களுக்கும்
விலங்கிடும் வீரர்களுக்கும்  
விளங்குவதில்லை விதிவழி
விலங்காகிக்கொண்டிருக்கும் என்னை.