கல்லுக்கும் மண்ணுக்கும் மூத்த நம் தாய்த்தமிழை வளர்க்க, சங்கம் வைத்து பட்டி தொட்டிகளை எல்லாம் பைந்தமிழ் பாசறைகலாக்கிய காலம் தொட்டு கலிபோர்னியாவில் "தமிழ் அகடமி" வைத்து மொழிவளர்க்கும் முதிர்ச்சியுற்ற இக்காலம் வரையிலும் தமிழ் மொழிப்பாடத்தில் சமூக மேம்பாடு குறித்து பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை போலும்; தமிழ் எழுத்துவடிவ வளர்ச்சி மற்றும் பெரியார் செய்த சில வடசொல் நீக்கம் தவிர.
ஆம் தோழர்களே, ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் பாடநூல் ஆசிரியர்கள் விட்ட குறைகள் இன்றுவரை தொடர்வதுகண்டு வலியோடு எழுதுகிறேன் என் வருத்தங்களை தெரிவிக்க சில மாற்றங்களை வருவிக்க...
அதாவது, இன்றும் எழுத்திலும், பேச்சிலும் "மளிகை கடைக்காரர்" என்றும் "மாட்டு வண்டிக்காரன்" என்றும் ஏற்றத்தாழ்வை இன்னும் தொடர்கின்றோம். செய்யும் தொழில் சார்ந்து, குலம் (குளமும்) பிரித்து, மதில்கட்டி, மதிப்பளித்த மடமையை இன்னும் தொடர்கிறோம். ஒரு சிலரை தவிர, பெரும்பான்மையான மக்கள் இதுபற்றி சிந்திப்பதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை. ஆகையால், சாக்கடையைபோல, குப்பையைபோல, அசிங்கமான - அழகற்ற சொற்கள் தெருவில் குவிகின்றன...நோயை பரப்புகின்றன...
வெறுமனே வருமானத்திற்காக படைப்பாளிகள் செய்யும் துரோகம் மட்டுமில்லாமல், இக்குறை கல்வியிலும் தொடர்வதுதான் வேதனை. மேலும் சில கல்வி சார்ந்த ஊடகங்களிலும் இக்குறை காணப்படுகிறது. இக்குறை தென்படுபோதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களை நாம் அணுகியிருக்கிறோம். நீங்களும் ஆவன செய்வீர்களாக...
பேச்சு தமிழிலும், எழுத்து தமிழிலும் மரியாதையை குறிக்க அல்லது குறைக்க அவர், அவன், அவள் என்ற சொற்களை பயன்படுத்துவது இலக்கணம். இடம், பொருள், ஏவல் பொறுத்து அதை பயன்படுத்த நாம் கற்றுகொள்ள வேண்டும், அடுத்த சந்ததியினருக்கும் கற்றுதரவும் வேண்டும். குறிப்பாக பாடநூல்களில் மரியாதையான சொற்களே இடம்பெற வேண்டும். மகத்துவமற்ற வாக்கியம்யாவும் வழக்கொழிக்கப்பட வேண்டும், வருங்கால சந்ததியினர் வாய்மணக்க பேசவேண்டும், வள்ளுவன் புகழாய் வாழவேண்டும்...
அவரும் அவனும்
============
செய்யும் தொழிலே தெய்வம் என்று தொல்தமிழ் கூறிநிற்க,
குணம் கெட்டு நாமும் அதை குலம்பிரித்து மதிப்பளிக்கலாமோ...
தமிழ் போதை ஏற்றும் எழுத்தினிலே பேச்சினிலே மனித பேதம் ஏற்றி பேசலாமோ...
தமிழ் பேதையர் தம் அறிவினிலே தவறான சொல்லேற்றி வைக்கலாமோ..
குலமேற்றும் குழந்தையர் தம் மனதினிலே குலம்பிரித்து வைக்கலாமோ...
அழகான குழந்தையினுள் அழகற்ற சொல் எதற்கு?
அறிவான குழந்தையினுள் அறிவற்ற சொல் எதற்கு?
அவர் இவர் என்ற அலங்கார சொல்லெல்லாம்
அழகென்போம், அறிவேன்போம்...
அவன் இவன் என்ற அகங்கார சொல்லெல்லாம்
அழிவென்போம், இழிவென்போம்...
நம்மை பொறுத்தவரை, மானசீக மரியாதையுடன் திருப்புகழை மட்டுமல்ல தெருப்புளுவை பாடும்போதும் வாய் மணக்கும்...
(முன்பு எழுதிய சமத்துவபுர கவிதை ஒன்று..)
சமத்துவபுர கவி
==============
சமத்துவம் ஓதும் கவிஞன் நான் - அதை
போற்றி தொடுத்தேன் கவிதைஞான்
வந்து விழுந்தன ஒரேவரியில்
கவித்துவமான நல்வார்த்தைகளாய்
மளிகைக்கடைகாரரும்
கைவண்டிகாரனும்.
வருங்காலம் வண்ணங்களாகட்டும், வர்ண வாக்கியங்கள் வழக்கொழிந்து போகட்டும்...
--
கோபம் புரிகிறது...ஆனால் கலிபோர்னியா தமிழ் அகடமி மேலும் திருப்புகழ் மேலும் என்ன கோபமோ?
பதிலளிநீக்கு-கருப்பையா
கலிபோர்னியா தமிழ் அகடமி நடத்தும் தமிழ் கல்வி நூலில்தான் நான் குறிப்பிட்ட "அவன்", "அவர்" என்ற ஏற்றத்தாழ்வுகள் இன்னும் இளையவரிகளிடையே கொண்டுசெல்லப்படுகிறது.
பதிலளிநீக்குதிருப்புகழின் மீது கோபமில்லை, தெருப்புளுவும் அதற்கு சமமானதே என்பது எம் கருத்து.