சனி, ஜூலை 10, 2021

நாம் தமிழர் கட்சி நல்லவர்களே, நன்றி.

அனுப்புநர் :

        சா. மகேந்திரன், சான்ஃகுசே, கலி̀ஃபோர்னியா.

        உறுப்பினர் 43514685172, நாம் தமிழர் கட்சி, வட அமெரிக்கா.

பெறுநர் :

        நாம் தமிழர் கட்சி,

        இரவணன் குடில், போரூர், சென்னை, தமிழ்நாடு.


தலைப்பு : வெளிப்படைத்தன்மையோடும், பொறுப்புடைமையோடும் விலகிக்கொள்ளும் விளக்கமடல்.


என் அகத்திற்கும் புறத்திற்கும் உறவான தமிழர்களே, என் மறத்திற்கும் திறத்திற்கும் இணையான தோழர்களே, என் அறத்திற்கும் அறிவிற்கும் சமமான மனிதர்களே, வணக்கம்.

ஒரு இக்கட்டான சூழலில் நான் இட்டுக்கட்டாமல் சாட்சி சொல்லி நம் சந்திப்பிற்கு நன்றி கூறி விலகி நிற்க நான் எழுதும் திறந்த மடல், இது, நான் கடந்த கடல்.

இருண்ட போர் மேகங்களுக்குள், மழைவிட்டும் தூவானம் விடவில்லை எனும் வசனம் கேட்டு விசனமானவர்களில் நானும் ஒருவன். நாடுகளின் கோட்டுக்குள், வீடுகளின் சுவருக்குள் நடுக்கமின்றி ஆடிய தசைகளில் எனதும் ஒன்று. உணர்வலைகள் ஓங்கியது, மனிதச்சங்கிலி தாங்கியது, இராமேசுவரம் கொந்தளித்தது, நாம் தமிழர் வந்துதித்தது என அனைத்திலும் தொலைதூர பங்காளனாக பார்த்துக்கொண்டும் வேர்த்துக்கொண்டும் இருந்த வட அமெரிக்க தமிழர்களில் இனம் காக்க ஓடித்தேடி வந்து கூடிய முதல் ஐந்து தமிழர்களாகிய நாங்கள் 'நாம் தமிழர் அமெரிக்கா' என்ற அமைப்பை கலி̀ஃபோர்னியா மாகானத்தில் பதிவு செய்து, இயற்கை உருவாக்கிய இயக்கத்தை பலமாக்க களமாடியது முதல் நேற்றுவரை என்னாளான கடமைகளை செய்துகொண்டிருந்திருக்கிறேன், தேவைக்கேற்ப பெய்துகொண்டிருந்திருக்கிறேன்.

ஆயினும் தோழர்களே, காலத்தே களமிறங்கிய படையை ஞாலத்தே நன்னிலம் படைக்கச்செய்ய நானாற்றிய பங்கினில், நான் கொண்ட வேள்வியில்,  நான் கேட்ட கேள்வியில், நான் பெற்ற தோல்வியில், துயர்களுக்கிடையிலும் கண்ட கனவு வெல்ல கொண்ட கொள்கையை கோட்டைக்கு அனுப்புவதற்கு குரல் எழுப்பி, கொடி ஏற்றி, படி ஏறி படைவெல்ல பங்களிப்பு செய்துவந்தேன் ஒரு தமிழனாக, உலக மனிதனாக.

இருந்தபோதிலும், கட்சி விமர்சனங்களை ஏற்காதது, வெளிப்படைத்தன்மை காட்டாதது, பொறுப்புடைமை பேனாதது, சனநாயகம் செய்யாதது, உண்மைக் கணக்கு காட்டாதது, சாதிச்சதி தாண்டாதது, சமூக புரட்சியாளர்களாக களமிறங்கி சமகால அரசியல்வாதிகளாக கலகலப்பது, சமதமிழர்களை உலகிற்கு மதித்துக்காட்டவேண்டியவர்களே சகதமிழர்களை மிதித்துக்காட்டுவது, சொந்த சுகந்திரத்திற்கு பொதுக்கனவை காவுகொடுப்பது, அநாகரீக அடாவடி பச்சைச்கொச்சை பேசுவது, எவரையும் எடுத்தெரிந்து ஏசுவது, சிறார்களை சில்லரை வாதத்தில் இறக்குவது, இரத்தவனையும் இழிவுசெய்து வீசுவது,  தனிமனித பாதையாவது, கூடா நட்பால் சேரான இடம் சேர்வது, சொந்தம் பந்தம் உறவு பணிவு ஆகியன அவசியமாவது, இது என்கட்சி என பொதுக்கிணற்றில் எச்சில் உமிழ்வது, இயக்கத்திற்குள் தலைமையை அடக்காது பொது இயக்கத்தையே தனிமனிதனுக்குள் அடக்குவது போன்ற இறந்தகால ஏற்புகளை எதிர்காலப் புரட்சியில் சேர்ப்பது, இன்றே கடைசி என்பதுபோல் இயற்கையை மறந்து இன்னுமொரு ரசிகப்படையாவது, ஏவலாக காவலாக இணையத்தில் இருட்டடிப்பு வேலைகள் செய்வது,  இலக்கணப்பிழையையும் இசமென இழுப்பது, கேள்வியின்றி பதிலின்றி கேட்பாரின்றி கேளிக்கையாவது, என இன்னும் சிலபல இடுக்கண்கள் யாவும் என்னறிவிற்கு ஏற்பு இல்லை, அவை யாதும் தமிழ் அறத்தின் திறத்தில் இல்லை.

ஆட்சியில் மட்டுமா புரட்சி, அரசியலிலும் புரட்சி என்றோமே, அதை உட்கட்சியிலும் செய்தல் வேண்டும் என்பது என் முதல் நிலைப்பாடு. சனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஒப்புக்கொடுத்தல் இவையாவும் நல்ல அமைப்பிற்கான நான்கு தூண்கள். வெரும் தனி மனித நம்பிக்கை, தரும் இரும்புக் கம்பிக் கை, நெடுங்கால இயக்க பயணத்திற்கு ஆபத்தானது. கூடும் பெருங்கூட்டம் வேள்வியில்லாது வெறுங்கூட்டமானால் கேள்வியில்லாது தருங்கூட்டமானால், மக்கள் பெறும் பயனானது மாநிலம் மூழ்கும் பெரும் கடனாகிப்போகும். நாம் எதிர்க்கும் கட்சிகள், அவ்வழியில் வந்தனவே, அத்தோல்வி தந்தனவே. ஆகையால் அடிப்படை மாற்றமும் அரசியல் புரட்சியியும் மன்னில் நிகழ, முதலில் அது உன்னில் நிகழ வேண்டும்.  நம்மில் நிகழாத மாற்றம் நாட்டில் நிகழாது, அகத்தில் நடக்காத புரட்சி புறத்தே நடக்காது என்பது என் தின்னம். அந்த அடிப்படை மாற்றம், அந்த அரசியல் புரட்சி, தமிழர்களின் அரசியல் கட்சிகளின் உள்ளேயே நிகழ்தல் வேண்டும், அது  நடக்காததுவரை, தனித்தனி மனிதர்கள் தமிழர்களுக்கு தலைவர்கள் ஆகலாம், காடுகள் மலைகள் கடல்கள் தாண்டியும் கழனிகள் வாங்கலாம், வாழையடி வாழையாக வஞ்சித்து வாழலாம், ஆனால் தமிழர்கள் உலகில் தனித்துவம் அடைய முடியாது, உலகிற்கிணையான ஓர் ஊர் படைக்க முடியாது, வையத்தலைமை கொள்ள வா தமிழா என்பது வெறும் வாய்ச்சொல்லாகவே இனிக்கும்.

உற்றவனாக நடப்பிற்கு ஒத்துப்போவதைவிட, கற்றவனாக  மெய் தட்டிக்கேட்பதும் கை தட்டியேற்பதும் நன்மை எனக்கண்டவன் நான். ஆகையால், சிதைவுகளை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த முதல்நிலை மற்றும் கடைநிலை பொறுப்பாளர்களிடம், சரிசெய்யத் தேவையான உட்கட்சி கொள்கைகள், கோட்பாடுகள், கட்டமைப்புகள், வழிமுறைகள், நெறிமுறைகள் செய்துவைத்தல் குறித்து பலமுறை கருத்து தெரிவித்து, திட்டம் தந்து, காத்திருந்து, காலாவதியாகி, வழிவிட்டு வலிதாங்கி இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டிய கடமையை அறமறதிறத்தோடு செய்தும், கட்சியிலும் காட்சியிலும் மாற்றங்கள் ஏதுமின்றி, ஆனிபோயி ஆடிவந்தால் அனைத்தும் ஒருநாள் மாறுமென விதைத்தவன்போல் விதியேற்றுக் காத்திருந்தேன்.  அடிப்படை புரட்சி செய்யும் அறைகூவல் கேட்டுக் களமிறங்கி, அமைச்சராகும் ஆசையின்றி அறமறதிற அரசியலை முன்னெடுப்போரை ஒதுக்கி ஓடுங்கூட்டம் புரட்சித் தடம்  மாறுகிறதோ என  ஐயமுறுகிறேன், உட்பயிற்சி இல்லாத உள்ளீடற்ற ஒருகூட்டமாய் அடித்தாடமுடியாமல் அரசியலில் அடுத்தவர்முன் தடுமாறுமோ என அனுமானிக்கிறேன், இருப்பினும் சந்தேகத்தை சாதகமாக்கி வாழ்த்தி வழிவிடுகிறேன், காலம் பதில் சொல்லுமென விழிதொடர்கிறேன்.

அறமறதிறத் தமிழர்களே, அரசியல் ஆளுமைகளே, கண்ட நான் விண்டுவது யாதெனில், தனிமனித துதிமதிபதி தவிர்த்து, மறுயுக மனிதக் குழுவாக, சரிசம நாட்டுக் குடிகளாக, உலகு நிகர் மனிதர்களாக, உள்ளறவு வைக்காமல் ஒட்டும் உறுப்புகளாக, ஒளிவு மறைவு இல்லாத ஓவியங்களாக, ஒண்டிக்கு ஒண்டி உத்திக்கு உத்தி என்பதுபோல், ஒவ்வொருவரும் தன்னறிவோடும், தன்திறத்தோடும், தமிழறத்தோடும் அவரவர் தன்மானமும், தன்னுரிமையும் காக்கும் புதுயுக புனிதர்களாக அரசியலில் வடம் இழுப்பீர் வரலாற்றில் தடம் பதிப்பீர், எனக்கேட்டு, நீவிர் முயன்றதைச் செய்துமுடிக்க, எல்லாம் வல்ல இயற்கை வாய்ப்பும், வல்லமையும் அருளக்கோரி வாழ்த்துகளுடன், வாஞ்சைகளுடன் விடைபெறுகிறேன் எஞ்சோட்டு நாம் தமிழர் நல்லவர்களே, நான் நம்பிய எந்நாட்டு வல்லவர்களே. மண்டியிடாது மானத்தோடும், வீழ்ந்துவிடாது வீரத்தோடும், மங்கிவிடாத ஞானம் சேர்த்து வென்று வருவீர், நன்று புரிவீர்.

அறிவே தலைமை, அறமே பாதை, திறமே கடமை, மறமே உடைமை.

வாழ்க தமிழ்.

--

சாவண்ணா மகேந்திரன்.

நாள்: 7/10/21

இடம்: சான்ஃகுசே, கலி̀ஃபோர்னியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.