திங்கள், மே 30, 2011

இசை கொல்லனும் சிற்பியும் ...


வெகுநாட்களாக எழுதநினைத்து மறந்துபோன கட்டுரை இது. 

இனையதளத்தில் இசை ரசிகர்களின் மலிவான சண்டையை படிக்கும்போதெல்லாம் மனது வலித்தது, அவர்களை நொந்து சிந்தை  புளித்தது... ஆதாரம் மட்டுமல்ல அறிவும் இல்லாத வாதங்கள், பிரதிவாதங்கள்.... வாதிகளின் கோணங்களும் காரணங்களும் வெவ்வேறாக இருப்பினும் உலுக்கப்படுவதென்னவோ "இசை ரசிப்புத்தன்மை" எனும் ஆணிவேரே.

அதாகப்பட்டது,  யார் சிறந்த இசையமைப்பாளர்... இளையராஜாவா? எ.ஆர்.ரகுமான? 

"மேட்டுக்குடி மட்டும்  மகிழ்ந்த கர்நாடக ராகங்களை ஏழையின் வீட்டுபடிக்கும் அறிமுகம் செய்துவைத்து, கிள்ளுக்கீரையாக இருந்த நாட்டுப்புற  இசையை மல்லுக்கு கூட்டிவந்து திரை இசையில் ஒரு புரட்சி செய்து, சிலபல தலைமுறைகளை புரட்டிபோட்டு, மாபெரும் இசைராசாங்கம் நடத்திய இளையராஜாவா?""தெற்கத்திய கர்நாடக இசையையும், வடக்கத்திய ஹிந்துஸ்தானி இசையும் கலந்து பூசிமெழுகினாற்போல் பெண் அடக்கத்தையும் ஆவேசமாய் கூறும் புதுமைப்பென்போல இந்திய மற்றும் தமிழக  இசையின்  அடுத்த பரிணாமத்தை புதிய பரிமாணத்தில் செய்து காட்டி, மேற்குலகிற்கும் அதை அறிமுகம் செய்துவைத்த  எ.ஆர்.ரகுமானா?"


இவர்தான்  பெரியவர், அவர்தான் பெரியவர் என்று சண்டையிடும் வாதிகளில் பெரும்பாலோர் ரசிகமனப்பான்மையோடு இருப்பதே இந்த சோகம் நிகழ காரணம்.  இசையை விட்டுவிட்டு இசையமைப்பாளரை ரசிப்பதால் வரும் கேடு.


நமக்கு  இசையில் கேள்விஞானம் மட்டுமே. இவ்விருவர் பற்றி நம் சிற்றறிவுக்கு தோன்றியது இதுதான்..

"கருங்கல்லையும் பட்டைதீட்டி மின்னும்  வைரமாய் நறுக்கிடுவான்,
எங்கள் இசைஇளங்காளை, எ.ஆர்.ரகுமான் எனும் சிற்பி."

"கல்லையும்  கடினமான வைரத்தையும் நொறுக்கி உருக்கிடுவான்,
மனம்கவர்ந்த கள்ளன், இளையராஜா எனும் கொல்லன்."

ஞாயிறு, மே 08, 2011

மழைத்தவளையாய் ....பாகம் 4.

யார் தலைவன்
----------------------
யார் தலைவன்? பிரபலமாக பிழைப்பவனா,
பிறர் பலம் ஆகா உழைப்பவனா?
யார் தலைவன்? மக்கள் வெளிச்சத்தில் நிற்பவனா?
மக்களை வெளிச்சத்தில் நிறுத்துபவனா?
யார் தலைவன்? இனம் காக்க கம்பு தூக்குபவனா?
பணம் காக்க சொம்பு தூக்குபவனா?
யார் தலைவன்? ஊர்காக்க சாதித்து காட்டுபவனா ?
ஊழல்காக்க சாதியை காட்டுபவனா?
யார் தலைவன்? கோடிகோடியாய் கள்ள பணம் சேர்ப்பவனா?
தெருத்தெருவாய் நல்ல மனம் சேர்ப்பவனா.
யார் தலைவன்? புலியையும் புழுவாய் வளைப்பவனா?
புழுவையும் புலியாய் வளர்ப்பவனா?
யார் தலைவன்? கொடுமைகள் கண்டும் பொத்திக்கொண்டு இருப்பவனா?
கத்திக்கொண்டாவது இருப்பவனா?


மடையர் சாதி
--------------------
 
எங்கோ எவனோ எவனையோ வெட்ட
இங்கோ என்கழுத்திலும் கத்தி
நாம் அவனும் ஒரே சாதியென
எவனோ சொன்னதால்...

கருவறையும் கழிவறையும்
-----------------------------------------
கருவறையை கழுவுதலும்,
கழிவறையை கழுவுதலும்
பொதுமக்கள் வாழ்வை பேணும்
புனிதமான செயல் எனக்கொள்வோம்...


யார்  அல்ல, என்ன 
-----------------------------
கொள்கைகளே நாம் எதிர்ப்பது, கொண்டவர்களை அல்ல.
கருத்துக்களே நாம் விமர்சிப்பது, கருதியவரை அல்ல.
கலைகளே நாம் ரசிப்பது, கலைஞர்களை அல்ல. 
எழுத்துக்களே நாம் படிப்பது, எழுத்தாளரை அல்ல.சுரனையும்  சுதந்திரமும் 
-------------------------------------------
கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியாதவன்கிட்ட
மணிக்கணக்கா மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள் வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை,
வேங்கைகளின் சுதந்திர வேகமும், தாகமும் ...!

எது கவிதை...
---------------------

நெடியில்லா சொல்லெடுத்து,
நேர்மையான கருத்துவைத்து,
சொற்சுவையும் பொருட்சுவையும்
சொட்ட சொட்ட தேன்போல,
செருக்கோடு கையளிக்க புலவன்
வாய்ருசித்து மெய்யுருகி
வாய்ச்சொல் ஏதுமின்றி,
மலங்கவைப்பது கவிதையா?

மடித்து மடித்து எழுதி,
மதிப்பில்லா கதைசொல்லி
மலங்கக்குவது கவிதையா,
இதுபோல்?