புதன், செப்டம்பர் 23, 2009

புலிக்கும் பொருந்தும் பாரதியின் "பெல்ஜியத்திற்கு வாழ்த்து"...

அகமும் புறமும் அறிவாய், சொல்லும் செயலும் சுடராய் வாழ்ந்த சுத்தமான ஆண்மகன் மகாகவி பாரதியின் கவிதை தொகுப்பில் நெருப்பு கவிஞன் வரைந்த "பெல்ஜியத்திற்கு வாழ்த்து" என்ற கவிதையை கண்டேன், புலிக்கும் அது பொருந்துவதாக ஒரு நினைப்பு..


இதோ பாரதியின் "பெல்ஜியத்திற்கு வாழ்த்து"


அறத்தினால் வீழ்ந்து விட்டாய்!
    அன்னியன் வழிய னாகி
மறத்தினால் வந்து செய்த
    வன்மையைப் பொறுத்தல் செய்வாய்:
முறத்தினால் புலியைத் தாக்கும்
    மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச்
   செய்கையால் உயர்ந்து நின்றாய்!


வண்மையால் வீழ்ந்து விட்டாய்!
    வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
    சிந்தனை மெலித லின்றி 
ஒண்மைசேர் புகழே மேலென்று
    உளத்திலே உறுதி கொண்டாய்;
உண்மைதேர் கோல நாட்டார் 
    உரிமையைக் காத்து நின்றாய்!


மானத்தால் வீழ்ந்து விட்டாய்!
    மதிப்பிலாப் பகைவர் வேந்தன் 
வானத்தாற் பெருமை கொண்ட 
    வலிமைதான் உடைய னேனும்.
ஊனத்தால் உள்ள மஞ்சி
    ஒதுங்கிட மனமொவ் வாமல் 
ஆனதைச் செய்வோ மென்றே 
    அவன்வழி எதிர்த்து நின்றாய்!


வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!
    மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கி தன்னை 
    ஒளித்திட மனமொவ் வாமல்,
பாரத்தை எளிதாக் கொண்டாய்;
    பாம்பினைப் புழுவே என்றாய்;
நேரத்தே பகைவன் றன்னை
    நில்லென முனைந்து நின்றாய்;


துணிவினால்  வீழ்ந்து விட்டாய்!
    தொகையிலாப் படைக ளோடும் 
பினிவளர் செருக்கி னோடும் 
    பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்;
    பதுங்குதல் பயனென் றெண்ணாய்;
தணிவதை நினைக்க மட்டை
    நில்லென தடுத்தல் செய்தாய்.


வேருளுத லறிவென் றெண்ணாய்;
    விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருலை வெள்ளம் போலத்
    தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன் 
    வலிமையாற் புகுந்த வேளை
"உருளுக தலைகள், மானம் 
    ஓங்குகெ"ன்  றெதிர்த்து நின்றாய்.


யாருக்கே பகையென் றாலும்
    யார்மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
    உத்தர வெண்ணி டாமல்,
போருக்குக் கோலம் பூண்டு
    புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கு இடமில் லாமல் 
    வெட்டுவேன் என்று நின்றாய்.


வேள்வியில் வீழ்வ தெல்லாம் 
    வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண் டுலகிற் கென்றே
    வேதங்கள் விதிக்கும் என்பார்;
ஆள்வினை செய்யும் போதில்
    அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
    கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.


விளக்கொளி  மழுங்கிப் போக 
    வெயிலொளி தோன்று மட்டும்,
களக்கமா ரிருளின் மூழ்குங்
    கனகமா ளிகையு முண்டாம்;
அளக்கருந் தீதுற் றாலும் 
    அச்சமே யுளத்துக் கொள்ளார்,
துளக்கற ஓங்கி நிற்பர்;
    துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?
                    
                                 -- சுப்ரமணிய பாரதி.
       
என்று தோற்பினும் துணிந்தோரை தூக்கிபிடிக்கும் உண்மையான நெறிக்கவிஞன் பாரதியை உளத்திலேர்போமாக... உண்மை விளங்குவோமாக!


--
சாவண்ணா மகேந்திரன்

சனி, ஆகஸ்ட் 15, 2009

சுதந்திர நாள் வாழ்த்துகள் ...

இன்று நண்பர்களுக்கும், இந்திய குடிமக்களுக்கு 62-வது சுதந்திரநாள் வாழ்த்துகள் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

ஆடு, மாடுகள் முதல் ஆண்டவன் படைத்ததாக கருதப்படும் அத்துனை உயிர்களும் சுதந்திரமான வாழ்க்கையையே வேண்டி விரும்புகின்றன. தனி நாடு கோரிக்கைகள் மட்டுமல்ல தனி வீடு, தனி குடித்தனம், தனி அறை போன்ற குடும்பவியல் கோரிக்கைகளும் சுதந்திரத்தை மையமாகக்கொண்டதே. உயிர்கள் பேணும் அத்தகைய உண்ணதமான சுதந்திரத்தை நமக்காக வருந்தி வாங்கிக்கொடுத்த தியாகச்செம்மல்களுக்கு இந்நாளில் தலைதாழ்த்தி நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். முன்னோர் நமக்கருளிய இச்சுதந்திரத்தை இந்நாளைப்போல் எந்நாளும் கொண்டாடுவோமாக, பேணுவோமாக.

வியாபாரியாக வந்த மேற்குலக கொக்குகள் இருக்க இடம் கேட்டு, பின்பு கால்நீட்டி படுத்து, விலையாகிப்போன ராஜாக்களை ம-குடிப்பாம்பாக அடக்கி, நம்மிலேயே பிறந்த எத்தர்களை எளியவர்களின் எஜமானர்களாக்கி, அடிவருடிகளை அகங்கரம்மிக்க ஆண்டேகளாக்கி, ஜாதிவெறி பிடித்த ஜமின்களாக்கி, உழைக்கும் வாரிசுகளை ஊமைகளாக்கி, அவர்தம் உழைப்பை அட்டையென உறிஞ்சி உறிஞ்சி சுகபோக வாழ்க்கை வாழ்ந்த அந்த வேற்றுலக பிராணிகளை கத்தியின்றி ரத்தமின்றி விரட்ட விவேகமாக மிதவாதத்தை கையிலெடுத்த காந்திபுரத்தாரும், இரத்தம் குடிக்கும் அட்டைகளுகென்ன இரத்த தானமென சித்தம் தெளிந்த சுபாஷ், எதிரி ஏந்திய அதே கருவியேந்தி தீவிரவாதி என இகழப்பட்டு சில தலை எடுத்து, பல தலை கொடுத்து, விடுதலை வேட்கையோடு போராடி, ஒருவழியாய் பழம்தின்று கொட்டை சப்பிக்கொண்டிருந்த வெள்ளை கிழங்கள், மிச்சத்தை சுதந்திரமென காந்தியார் கையில்கொடுத்து காணாமல்போன 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள்முதல் இந்நாள்வரை, சுதந்திரநாளன்று குழந்தைகள் "ஜன கண மன" பாடிமுடிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் நெகிழ்ந்து, கண்ணீர்முட்ட, புல்லரிக்க தன்னிச்சையாக எழுந்து "ஜய ஜய ஜெயகே" என நாமும் பாடிமுடிக்கிறோம்.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பதைப்போல் அவரவர் நாட்டிற்கு அவரவர் சுதந்திரநாள் உணர்சிபொங்கும் ஒரு உன்னத திருநாளே, அத்தகைய நம் இந்திய சுதந்திரநாளை கொண்டாடும் அதே வேளையில், தெற்காசிய வல்லாதிக்க இசை நாற்காலி போட்டியில் இலங்கையில் அமர்வதற்கும் , பழைய பகை தீர்ப்பதற்கும், இலங்கை இனவெறி ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான, நம் தாய்மொழி தமிழ் பேசும் ஈழத்தமிழ் இரத்த உறவுகளின், சுதந்திர மீட்டெடுப்பு போராட்டத்தை, முன்னெடுத்துச்சென்ற தமிழீல விடுதலை புலிகளின் யுக்திகளை, இலங்கை இனவெறி ராணுவத்திற்கு ரேடார் மூலம் காட்டிக்கொடுத்து, இன்னும் பல கொலைக்கருவிகள் அவர் வாங்கிகுவிக்க பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்து, நமது வரிப்பானத்திலேயே நம் இரத்த உறவுகளுக்கு வலைபின்னி, பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்து, அவர்தம் விடுதலை போராட்டத்தை அடியோடு அழித்து, மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து, அடிமைப்படுத்தி, இன்று தனது 62-வது சுதந்திரநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் எனது இந்திய திருநாட்டை நினைக்கும்போது நம் நெஞ்சு பதறுவதும் நிதர்சனமே.

தன் நாட்டு மக்களின் பாதுகாப்பான, சுகமான வாழ்கையின் பொருட்டு, மாற்றானின் சுதந்திரத்தை களவாடிய கீழான செயலை செய்த ஒரு நாட்டின் குடிமகனாக இந்தநாளில் சிறுமை அடைகிறேன். அத்தகைய வாழ்க்கை பழக்கமில்லை எம் முன்னோருக்கு. நம் மறத்தமிழன் மானத்தையும், அதற்கு பொருந்தும் இந்தியத்தையும் தலைகொடுத்தேனும் அல்லது வழி தவறும் வலியோரின் தலைஎடுத்தேனும் காப்போமாக.

ஈழத்தமிழர் மட்டுமல்ல இன்னும் பல இனங்கள் இப்பூமிப்பந்தில் ஏதேனும் ஒரு வகையில் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றன, அவர்தம் அடிமைத்தலை நீக்கி விரைவில் வெளிச்சம் கண்பார்களாக, நாம் அவர்தம் விடுதலையை ஆமோதிக்கும் மனம் பெறுவோமாக.

சுதந்திரம், ஒவ்வொரு உயிரின் பிறப்புரிமை.
மறுப்பதும், தடுப்பதும் உயிரியளுக்கெதிரான குற்றங்கள்.
நம் சுகத்தைவிட, மாற்றானின் சுதந்திரம் முக்கியமானது.
கருத்தில்லேற்போமாக, கவனம்கொள்வோமாக.

இந்தநாள் போல் எந்தநாளும் போற்றுவோம் சுதந்திரத்தை பேணுவோம் மனிதத்தை.

வாழ்க இந்திய சுதந்திரம்.
--
சாவண்ணா மகேந்திரன்.

திங்கள், ஜூலை 27, 2009

எம்வீட்டு காளைகளே...

பசும்புல் நீங்க மேய
பாடநூல் நான் மேய்ந்து
பரீட்சையிலே பேர் வந்து
பல்லக்கிலே வேலை வந்து
உறவை தொலைச்சுப்புட்டு
நான் உட்காந்தேன் இங்கே வந்து -
உங்க நெனைப்பை தொலைக்கலேயே
நெனைச்சாலும் முடியலேயே

----
படிச்ச வயசில, பட்டிக்காட்டுல,
கட்டாந்தரையில, கரிசல் காட்டில,
உழத கட்டியில,
அருத்த வயலில, அடிச்ச கலத்தில,
வாய்க்கா வரப்புல,
புறகரையில, புல்வெளில,
பொங்கல் பூசையில, உங்க குளியலில.,
இப்படி ஒண்ணா ரெண்டா?
நாம் ஒட்டியிருந்த தருணங்கள்,
நீர் கொட்டிகொடுத்த நினைவலைகள்.

---
கட்டாந்தரையில, கவுந்து நீங்க ஓய்வெடுக்க,
கக்கத்துல ஒக்காந்திட்டு நெத்தி சொறிஞ்சிவிட,
நீங்க நெளிவாக தலை நீட்ட,
தொட்டு பரிமாறின நினைவு வந்து தலைகாட்ட,
இப்பவும் நீளுதுவேய் அனிச்சையாய் எங்கையி.
---
சண்டைக்காரன் பயிரோட சகவாசம் நீங்க வைக்க,
ஓங்கி அடிச்சிட்டாலும், ஒப்புக்கும் கோவிக்காம - எங்க
அப்பனுக்கு இருபொறப்பா, ஆத்தாலோட உடன்பிறப்பா,
உழைத்து உழைத்து எங்களை உலகத்திற்கு அனுப்பி வைத்து,
வெள்ளிக் கிழமை சந்தையிலே வெலையாகி போனமக்கா,
எங்கே இப்போ இருக்கியலோ, ஏரின்னும் இழுக்கிறியலோ,
நினைக்க பதைக்குதிய்யா நினைதுறந்த எம் உயிரு.
-------
கொட்டும் மழை ஒழுக,கொசுக்கடி ரணம் பெருக,
மூத்திர சகதியிலே,முழு இரவும் நின்ரீரே!
-----
உழைத்தே நைந்து போனீரோ - இல்ல
உலையிலே வெந்து போனீரோ
நினைக்க வேகுதய்யா நெஞ்சுநிலைகுத்தி போகுதய்யா.

----
உழைக்கத்தான் உம்பிறப்போ,
நீர் என்தாய் பெறாத உடன்பிறப்போ,
நீர் சளைச்சு நான் பார்த்ததில்ல, சம்பளமும் கேட்டதில்ல,
வாங்காத கூலிக்கு, வருசமெல்லாம் உழைச்ச உம்மை,
பெரிசா நெனைச்சதில்ல, பெருஞ்சிறப்பு செஞ்சதில்ல,
புரிஞ்ச இந்தப்புழு புண்ணியம் தெடிக்கொள்ள,
மறுபிறப்பு ஒண்ணு இருந்தா? மறக்காமல் நாம் பிறப்போம்,
உமக்கு நான் மாடாக, அல்லது, எமக்கு நீர் மக்களாக!

-- சாவண்ணா மகேந்திரன்

ஞாயிறு, ஜூன் 21, 2009

யார் கோழை: வேங்கை புலி அவனா, வெறி நாய் நீயா?

உண்மைதான?, நடந்தேறிவிட்டதா?, குதறிவிட்டனவா கொடுஞ்செயல் காலிகள்?, அது அந்த மறத்தமிழனின் உடல்தான?, மரிதிருப்பனா அந்த மாவீரன்? மரணமுண்டோ அந்த மகத்துவ புலிக்கு?, அவன் தப்பி பிழைதிருக்கவேன்டியது தருமமில்லையா? என பல்வேறு சோகம் கலந்த சிந்தனைகளுடன் மிரண்டுகொண்டிருந்த எம்மை கொதிக்க வைத்தது அந்த கொடியவர்களின் கோட்டையிலிருந்து வெளியான குனம்கெட்ட செய்தி ஒன்று. வேதனையோடு எம்மை சிரிக்கவும் வைத்தது கோபத்தின் விளிம்பிளின்னும் குரைக்கும் அந்த குறைமதி கூலிகளின் குமுறல்.

காலிகள் கூடி கெஞ்சி, கூத்தாடி, கூலிகள் வாங்கி, காட்டிக்கொடுத்து, வஞ்சகமாய் நெஞ்சருத்த இந்த வெறிநாய் கூட்டம் விளிக்கிறது அந்த வீரனை கோழை என்று.

http://www.defence.lk/new.asp?fname=20090621LastBattleN

கோபத்தை மட்டும் கொட்டி இருக்கும் இந்த பெட்டை கோழிகளுக்கு புத்தி கூற வெடித்தது என்நெஞ்சு இப்படி ....


இருபத்தைந்து பேருடன் காடு புகுந்து,
ஈராயிரம் பேருடன் களம் புகுந்து,
இருபதாயிரமும் புறமுதுகு வென்று,
முப்படைகட்டி உன்னை மூச்சிரைக்க வைத்த,
இருயானை பலத்தை ஒரு புஜத்தில்கொண்ட,
அந்த மறதமிழ் புலியா கோழை?

நீ படைகட்டி வந்தபோதும் தொடைதட்டி நின்றவன்,
ஒருநூறு ஊடு அறுப்புகளில் உம்முடல் உருப்பறுத்தவன்,
மண்டியிட மறுத்தவன், மானமில்லா வாழ்வை வெறுத்தவன்,
இறுதிவரை களம் நின்றவன், இயற்கையை வென்றவன்,
அந்த வேலுப்பிள்ளை பெத்த வீர பிள்ளை.

கோழையென யாரை கூறுகிறாய் குற்றம்,
வீரனை கோழையென தூற்றும் உம் கூற்றிலுள்ளது குற்றம்,
வித்தியாசம் விளக்கி உரைக்காத உம் குருவிலுள்ளது குற்றம்,
குனம்கெட்ட கூட்டத்தில் தரித்த உம் கருவிலுள்ளது குற்றம்,
அகராதி புரட்டிப்பார் அதுவிளக்கும் கோழை அவனா, நீயா என்று.

--
சாவண்ணா மகேந்திரன்

வெள்ளி, மே 01, 2009

உழைப்பாளர் தின வாழ்த்துகள் !

தோழர்களே,

மேதினம், மே மாதம் முதல் தேதி, மனிதன் குனிந்து மனிதத்தை நிமிர்த்திய வரலாற்றை போற்றும் நாள். வல்லரசுகளும், வல்லாதிக்க மனித இனங்களும் உழைப்பால் உயர்ந்தவை என உலகிற்கு உச்சரிக்கும் நாள். உழைபவனே உயர்ந்தவன், உயருபவன், மற்றவனெல்லாம் தாழ்ந்தவன்; முப்பாட்டன் சொன்னது.

மனித உழைப்பில் உருவாகியதுதான் இன்றைய உலக வசதிவகும், வாய்ப்புக்களும். உழைப்பில்லாமல் உயர்ந்தவரில்லை, உயர்ந்திருந்தால் அவர் "உயர்ந்தவர்" இல்லை.

உழைப்பு என்பன எவை? வண்டியிளுப்பதும், வாய்க்கள் வெட்டுவது மட்டுமா? இல்லை..இல்லை, சாலை செய்வது மட்டும் அல்ல, மூளை செய்வதும் உழைப்புத்தான்.

காலகட்டங்களுக்கு ஒத்து, மூளையை கசக்கி புது யுக்திகளையும், மனிதமேம்பாட்டு வாய்ப்புக்களையும் கருவாக்கி உருவாக்குபவன் படைப்பாளியாகிறான்; ஆதலினால் படைத்தவனின் அகரதியாகிறான்.

யுக்தியில் பக்தி வைத்து முதலீடு செய்து மனித மேம்பாட்டை முன்னுக்கு இழுப்பவன் முதலளியாகிறான்.

உடலுழைப்பாலும், ஒத்துழைப்பாலும் மனித சக்தியில் மானுடத்தை உந்தி தள்ளி உயர்த்தி பிடிப்பவன் தொழிலாளியாகிறான்.

இவர் அனைவரும் உழைப்பாளியாகிறார், உழைப்பதினால் உயர்சாதியாகிறார்.

படைப்பாளியும், முதலாளியும், தொழிலாளியும் எப்போதும் பங்காளிகளாக வாழ்வார்களாக, மனிதமேம்பாட்டை பேனுவார்களாக.

வாருங்கள் உழைப்பாளர்களே, வணங்குவோம் மேதினத்தை.

--
சாவண்ணா மகேந்திரன்.

புதன், ஏப்ரல் 22, 2009

மழைத்தவளையாய்....2

தீவிரவாதம்
~~~~~~~~
பசித்த குழந்தை
பால்வராத முலைகடித்ததா
தீவிரவாதம்?
பார்வை போதும்
~~~~~~~~~~~~
கண்கள் மட்டும் சந்தித்துவிட்டால்
கழுதைக்கும் மலரும் காதல்
காக்கையின் மீதும்!நிழலின் அருமை
~~~~~~~~~~~~
கடன் வாங்கி
கப்பம் கட்டி
டியூசன் வைத்து
உறவின்முன் பேசவைத்து
வெள்ளைமொழி கேட்டு மகிழ்ந்தார் அப்பா.

வாத்தியார் தேடிச்சென்று
வரிசையில் தெருவில் நின்று
விடுமுறையில் நடைமுறை கண்டு
விருந்தின்முன் பேசச்சொல்லி
பிள்ளைத்தமிழ் கேட்டு மகிழ்கிறேன் நான்.

கலிபோர்னியா வெயிலில் தெரிகிறது
நிழலின் அருமை!கோழைத்தனம்
~~~~~~~~~~
உரிமை கேட்டு உருமும் எமை
முடக்கும் மும்முரத்தில் மறந்துவிட்டாய்
பல்லிளிக்கும் உன் கோழைத்தனம் மறைக்க!குறையாண்மை
~~~~~~~~~~
உரிமைகேட்டு ஊரைக்கூட்டுபவன்
கேள்வியின் பதிலுக்கு கையாலாகாமல்
இறையாண்மை பேரைச்சொல்லி சிறையிலிடுகிறது
குறையாண்மை கூட்டம்.

ஞாயிறு, பிப்ரவரி 22, 2009

தரணி புகழும் தமிழன்

தமிழிசை கலைஞன் எ.ஆர்.ரகுமான் இன்று வான்புகழ் கொண்டான், தமிழன் வானுயர்ந்தான். பட்டயம் வாங்கியன் பாடிமுடிதான் ஓர் வரியில், "எல்லா புகழும் இறைவனுக்கே". சொல்லி அடித்தான் சொக்கும் தமிழில், சொர்க்கம் சேர்ந்தது எம் இதயம். உலக அரங்கில் ஓங்கி ஒரைதான் ஒரு உண்மை தமிழன், எல்லா புகழும் இறைவனுகென்று. வாழ்க அவன் தமிழுணர்வு, வளர்க அவன் புகழ்.
ஆஸ்கர் வென்றான் அருமை தமிழன், அசைந்து போனது எம்மிதயம்.
வெற்றிகள் பல அவன் குவிப்பான், வேங்கை தமிழ் அவன் புகழ்வான்

--
சாவண்ணா மகேந்திரன்.

புதன், பிப்ரவரி 18, 2009

தொடரும் தீக்குளிப்புகள்

முத்துக்குமார் தொடங்கிய கவனஈர்ப்பு தீக்குளிப்பு போராட்டம் பட்டிதொட்டிகளிலெல்லாம் தொடர்ந்தும் அது உலத்தின் கண்களை உறுத்தவில்லை என, மனமுடைந்த ஈழத்தமிழன் ஐ.நா சபை முன் தன்னை எரித்து மாய்த்துக்கொண்டான் தன்னுயிரை. தொலைநோக்கு பார்வையற்றஅறிவாளிகளுக்கு அருகில் எரிந்தது ஒரு உயிர் என்பதுகூடவா புரியவில்லை. கடிதம் அல்ல கட்டுரை அல்லவா எழுதிவைத்துவிட்டு கருகியிருக்கிறான் அந்த கண்ணியவான். நாய் பூனைகெல்லாம் வாதாடும் மேற்குலகங்கள் மேனி கருகியவன் ஈனஸ்வரத்தில் எழுதியதன்பொருளை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை?

தன் சாவு ஒருவிடியலுக்கு கூவும் என பேராசைகொண்டவன் நினைப்புகள் நிராசையாய் நிற்பதுவேதனையே.

எல்லாம் டெல்லியால்தான் முடியுமென புழுகி இந்த உலகதமிழர் இன தலைவர், வாய்சொல்வீரர், வழம்புரி சங்கு கருணாநிதியின் கருணை கழண்டுகொண்டது.

கொம்பு சீவி விட்டு வடம்பிடித்த இந்திய அரசு, இப்போது அது அந்நாட்டின் உள்நாட்டுபிரச்சினை என வீம்புக்கு வில்லங்கம் பேசுகிறது, அதற்கு தமிழக காங்கிரஸ் வட்டாரம் ஒரு கையில்விசிறியையும் மறுகையில் திருவோடையும் தாங்கிநிற்கிறது.

தட்டி கேக்கவேண்டிய ஐ.நா, சும்மா ஒப்புக்கு, போரை இருவருந்தான் நிறுத்த வேண்டுமென கூறி தட்டிக்கழிக்கிறது.

இதுதொடர்ந்தால், கத்தி கத்தி தொண்டை காய்ந்த கூட்டம் கடைசியில் கத்தியைதானே தூக்கும். மிதவாதங்கள்திமிர்கொண்டு தீவிரமாவதெல்லாம் இப்புள்ளியில்தானே.

நோய்நாடி அதன் முதல்நாடி ... என வள்ளுவன் இதைத்தானே படைத்துவைத்தன் இருவருயில்.

உரிமைகள் மறுக்கப்படும் பொழுதும், உணர்வுகள் ஒருக்கபடும் பொழுதும் பொறுத்து பொறுத்து வெறுத்து வெடித்து சிதருவதுதான் புரட்சி. புரட்சிகளே தரும் மறுமலர்ச்சிகள்.

கருகியவர்கள் கணம் பெறுவார்களாக. அவர்பொருட்டு நாம் ஈழவிடுதலை மனம் பெறுவோமாக.

--
சாவண்ணா மகேந்திரன்.