ஆரம்ப காலங்களிலிருந்தே Tamil-என்று எழுதி பழகிவிட்டதால் இன்றுவரை நாம் "தமிழ்" என்ற சொல்லை "டமிழ்" என்று உச்சரிக்கப்படும்படியாக எழுதிக்கொண்டும், தமிழ் தெரியாதவர்க்ளிடத்தில் புரியும்படியாக டமிழ் என்றே உச்சரித்துக்கொண்டுமிருக்கிறோம். பழகியும்விட்டது.
இருப்பினும், இது தவறானதாகவும், நியாயமற்றதாகவும் எனக்குள் பலவருடங்களாக உறுத்திக்கொண்டிருக்கிறது.
ஒரு மொழியிலுள்ள சொற்களை வேற்று மொழியில் எழுதும்பொழுது அம்மொழியின் வசதியைபொறுத்து எழுதப்படுவதும், அதில் ஒருசில ஒவ்வாமைகள் இருப்பதும் தவிர்க்கமுடியாததுதான். இருப்பினும் இதுபோன்ற தருணங்களில் அதன் உச்சரிப்பு முடிந்தளவு முதல்மொழியின் உச்சரிப்புக்கு ஒத்துப்போகும்படி அமைத்துக்கொள்ளவது அவசியம். மேலும், பெயர்ச்சொற்கள், சற்று அதிக முக்கியத்துவத்துடன் , அமைப்பும் தன்மையும் சிதையாமல் கையாளப்படவேண்டும், என்பது எனது கருத்தாகும்.
ஆதலால், நாம் "Thamil"-என்றுதான் எழுதவேண்டும் என்பது எனது கருத்தும், வாதமுமாகும். இதனால், டமிழ் என்ற உச்சரிப்பும் மாறும்.
நம்மில் சிலபேர் இன்னும் ஒருபடி மேலேபோய் அது "Tamizh"-என்றோ அல்லது "Thamizh"-என்றோதான் எழுதப்படவேண்டும் என்று வாதிக்கலாம். "ZH" என்பது தமிழின் சிறப்பு லகரமான "ழ்"-வை குறிப்பதாக ஒரு கருத்தும் நிலவக்கண்டதுண்டு. அக்கருத்தில் எனக்கு சம்மதமும் இல்லை, அது பொருத்தமானதாகவும் எனக்கு தோண்றவில்லை. எனக்கு தெரிந்தவரையில் -"ZH"-எனபது "ழ்"-வை குறிக்க கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர். அவ்வளவே.
அதேபோல், நம்மூர் ஆங்கில மேதாவிகளும், தேறாதவர்களும் தெறிந்தே "டமிழ்" என்று (style-க்காகவோ அல்லது மற்றவருக்கு எளிதாக புரிவதற்காகவோ) தவறாக உச்சரிப்பது கண்டிக்கதக்கது என்போம். அது ஒரு இழிநிலை எனக்கூறுவோம்.
இதுபோன்ற அவலங்களை செய்துகொண்டும், அங்கீகரித்துக்கொண்டும் கண்டுகொள்ளாமல் எட்டிபோவதும், விட்டுக்கொடுப்பதும் தன்மாணமற்ற ஒரு செயலே எனக்கருத்தில்கொள்வோம்.
இதுமட்டுமல்லாது, இது போன்ற பல தமிழ்ச்சொற்கள் அறியாமையால் தவறாக எழுதப்பட்டுக்கொண்டும், உச்சரிக்கப்பட்டுக்கொண்டும் சிதைக்கப்படுகின்றன. இவையெல்லாம் பொறுப்பற்றதன்மையாலும், சற்று கடினக்கூறினால், சொரனையற்றதன்மையாலும் விளைந்த, விளையும், இன்னும் நிறைய விளையவிருக்கும் நாசங்கள்.
நாம் வாழ நம் மொழி பேணப்படவேண்டும் (பேனா படவும் வேண்டும்)
மொழி என்பது எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் ஒரு ஆயுதம்.
தாய்மொழி என்பது சிந்திக்கவும், உணரவும், இன அடையாளங்களை காக்கவும் உதவும் ஒரு பேராயுதம்.
நாளைய நமது சந்ததியினர் உலக-சமூகத்தில் அடையாளங்களை தொலைத்த அனாதைகளாகிவிடக்கூடாது.
ஆதலால், தமிழ் வளர்ப்பீர்.
--
சாவண்ணா மகேந்திரன்