வியாழன், நவம்பர் 13, 2008

மழைத்தவளையாய்...

திமிர்
===
நீ விட்டெறிந்ததை
தட்டேந்தாத எனை
திமிர் எனுமோ
உன் திமிர்


சமூக கந்தல்
=========
மூடைமூடையாய் துணியிருந்தும்
எப்போதும் கந்தலுடன்
எம் வண்ணானின் மகள்.

சமத்துவபுர கவி
==============
சமத்துவம் ஓதும் கவிஞன் நான் - அதை
போற்றி தொடுத்தேன் கவிதைஞான்
வந்து விழுந்தன ஒரேவரியில்
கவித்துவமான நல்வார்த்தைகளாய்
மளிகைக்கடை காரரும்
கைவண்டி காரனும்.

ஓர் மனப்பிரளயம்
================
எரியும் பூமி
உருகும் பனிமலை
சரியும் சந்தை
பெருகும் மந்தை
சுருங்கும் நிலம்
நிலத்தை பிரிக்கும் கோடுகள்
அதனால் விளையும் கேடுகள்
மொழியால் பிளவுபடும் தேசியம்
தேசியத்திற்கு பலியாகும் செம்மொழி
ஜாதிசதியால் கிளிபடும் மனிதம்
மனிதனால் வலுப்பெறும் ஜாதிவெறி
மனம் ஒவ்வாத இனகலப்பு
மானம் மழுங்கடிக்கும் நாகரீகம்
ஊரை சுற்றும் சாக்கடை
உயர உயரும் வேலிச்சுவர்
சுற்றி திரியும் சோம்பேறி
சுயநலம் போற்றும் சம்சாரி
சுருட்ட துடிக்கும் வியாபாரி
தன்மானம் இல்லாத அதிகாரி
தரித்திரம் படைக்கும் அரசியல்
சரித்திரம் படைக்கும் விலைவாசி
விவரம் அறியா எம்மக்கள்
விருந்தை விசமாக்கும் எம்தலைவன்
தனித்தே செயல்படும் ஒரே கொள்கை
தமிழரே படிக்காத தமிழ் கொள்கை
......
.......
இதுபோல் பிரச்சினை என்றும் பலபல
இன்னும் அடங்கா இச்சைகள் சிலபல
எதனை எப்படி களைந்தெறிவேன்
எல்லாம்வல்ல நான் முதலில்...

--
சவண்ணா மகேந்திரன்