வெகுநாட்களாக எழுதநினைத்து மறந்துபோன கட்டுரை இது.
இனையதளத்தில் இசை ரசிகர்களின் மலிவான சண்டையை படிக்கும்போதெல்லாம் மனது வலித்தது, அவர்களை நொந்து சிந்தை புளித்தது... ஆதாரம் மட்டுமல்ல அறிவும் இல்லாத வாதங்கள், பிரதிவாதங்கள்.... வாதிகளின் கோணங்களும் காரணங்களும் வெவ்வேறாக இருப்பினும் உலுக்கப்படுவதென்னவோ "இசை ரசிப்புத்தன்மை" எனும் ஆணிவேரே.
அதாகப்பட்டது, யார் சிறந்த இசையமைப்பாளர்... இளையராஜாவா? எ.ஆர்.ரகுமான?
"மேட்டுக்குடி மட்டும் மகிழ்ந்த கர்நாடக ராகங்களை ஏழையின் வீட்டுபடிக்கும் அறிமுகம் செய்துவைத்து, கிள்ளுக்கீரையாக இருந்த நாட்டுப்புற இசையை மல்லுக்கு கூட்டிவந்து திரை இசையில் ஒரு புரட்சி செய்து, சிலபல தலைமுறைகளை புரட்டிபோட்டு, மாபெரும் இசைராசாங்கம் நடத்திய இளையராஜாவா?"
"தெற்கத்திய கர்நாடக இசையையும், வடக்கத்திய ஹிந்துஸ்தானி இசையும் கலந்து பூசிமெழுகினாற்போல் பெண் அடக்கத்தையும் ஆவேசமாய் கூறும் புதுமைப்பென்போல இந்திய மற்றும் தமிழக இசையின் அடுத்த பரிணாமத்தை புதிய பரிமாணத்தில் செய்து காட்டி, மேற்குலகிற்கும் அதை அறிமுகம் செய்துவைத்த எ.ஆர்.ரகுமானா?"
இவர்தான் பெரியவர், அவர்தான் பெரியவர் என்று சண்டையிடும் வாதிகளில் பெரும்பாலோர் ரசிகமனப்பான்மையோடு இருப்பதே இந்த சோகம் நிகழ காரணம். இசையை விட்டுவிட்டு இசையமைப்பாளரை ரசிப்பதால் வரும் கேடு.
நமக்கு இசையில் கேள்விஞானம் மட்டுமே. இவ்விருவர் பற்றி நம் சிற்றறிவுக்கு தோன்றியது இதுதான்..
"கருங்கல்லையும் பட்டைதீட்டி மின்னும் வைரமாய் நறுக்கிடுவான்,
எங்கள் இசைஇளங்காளை, எ.ஆர்.ரகுமான் எனும் சிற்பி."
"கல்லையும் கடினமான வைரத்தையும் நொறுக்கி உருக்கிடுவான்,
மனம்கவர்ந்த கள்ளன், இளையராஜா எனும் கொல்லன்."