புதன், செப்டம்பர் 23, 2009

புலிக்கும் பொருந்தும் பாரதியின் "பெல்ஜியத்திற்கு வாழ்த்து"...

அகமும் புறமும் அறிவாய், சொல்லும் செயலும் சுடராய் வாழ்ந்த சுத்தமான ஆண்மகன் மகாகவி பாரதியின் கவிதை தொகுப்பில் நெருப்பு கவிஞன் வரைந்த "பெல்ஜியத்திற்கு வாழ்த்து" என்ற கவிதையை கண்டேன், புலிக்கும் அது பொருந்துவதாக ஒரு நினைப்பு..


இதோ பாரதியின் "பெல்ஜியத்திற்கு வாழ்த்து"


அறத்தினால் வீழ்ந்து விட்டாய்!
    அன்னியன் வழிய னாகி
மறத்தினால் வந்து செய்த
    வன்மையைப் பொறுத்தல் செய்வாய்:
முறத்தினால் புலியைத் தாக்கும்
    மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச்
   செய்கையால் உயர்ந்து நின்றாய்!


வண்மையால் வீழ்ந்து விட்டாய்!
    வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
    சிந்தனை மெலித லின்றி 
ஒண்மைசேர் புகழே மேலென்று
    உளத்திலே உறுதி கொண்டாய்;
உண்மைதேர் கோல நாட்டார் 
    உரிமையைக் காத்து நின்றாய்!


மானத்தால் வீழ்ந்து விட்டாய்!
    மதிப்பிலாப் பகைவர் வேந்தன் 
வானத்தாற் பெருமை கொண்ட 
    வலிமைதான் உடைய னேனும்.
ஊனத்தால் உள்ள மஞ்சி
    ஒதுங்கிட மனமொவ் வாமல் 
ஆனதைச் செய்வோ மென்றே 
    அவன்வழி எதிர்த்து நின்றாய்!


வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!
    மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கி தன்னை 
    ஒளித்திட மனமொவ் வாமல்,
பாரத்தை எளிதாக் கொண்டாய்;
    பாம்பினைப் புழுவே என்றாய்;
நேரத்தே பகைவன் றன்னை
    நில்லென முனைந்து நின்றாய்;


துணிவினால்  வீழ்ந்து விட்டாய்!
    தொகையிலாப் படைக ளோடும் 
பினிவளர் செருக்கி னோடும் 
    பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்;
    பதுங்குதல் பயனென் றெண்ணாய்;
தணிவதை நினைக்க மட்டை
    நில்லென தடுத்தல் செய்தாய்.


வேருளுத லறிவென் றெண்ணாய்;
    விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருலை வெள்ளம் போலத்
    தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன் 
    வலிமையாற் புகுந்த வேளை
"உருளுக தலைகள், மானம் 
    ஓங்குகெ"ன்  றெதிர்த்து நின்றாய்.


யாருக்கே பகையென் றாலும்
    யார்மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
    உத்தர வெண்ணி டாமல்,
போருக்குக் கோலம் பூண்டு
    புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கு இடமில் லாமல் 
    வெட்டுவேன் என்று நின்றாய்.


வேள்வியில் வீழ்வ தெல்லாம் 
    வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண் டுலகிற் கென்றே
    வேதங்கள் விதிக்கும் என்பார்;
ஆள்வினை செய்யும் போதில்
    அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
    கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.


விளக்கொளி  மழுங்கிப் போக 
    வெயிலொளி தோன்று மட்டும்,
களக்கமா ரிருளின் மூழ்குங்
    கனகமா ளிகையு முண்டாம்;
அளக்கருந் தீதுற் றாலும் 
    அச்சமே யுளத்துக் கொள்ளார்,
துளக்கற ஓங்கி நிற்பர்;
    துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?
                    
                                 -- சுப்ரமணிய பாரதி.
       
என்று தோற்பினும் துணிந்தோரை தூக்கிபிடிக்கும் உண்மையான நெறிக்கவிஞன் பாரதியை உளத்திலேர்போமாக... உண்மை விளங்குவோமாக!


--
சாவண்ணா மகேந்திரன்

சனி, ஆகஸ்ட் 15, 2009

சுதந்திர நாள் வாழ்த்துகள் ...

இன்று நண்பர்களுக்கும், இந்திய குடிமக்களுக்கு 62-வது சுதந்திரநாள் வாழ்த்துகள் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

ஆடு, மாடுகள் முதல் ஆண்டவன் படைத்ததாக கருதப்படும் அத்துனை உயிர்களும் சுதந்திரமான வாழ்க்கையையே வேண்டி விரும்புகின்றன. தனி நாடு கோரிக்கைகள் மட்டுமல்ல தனி வீடு, தனி குடித்தனம், தனி அறை போன்ற குடும்பவியல் கோரிக்கைகளும் சுதந்திரத்தை மையமாகக்கொண்டதே. உயிர்கள் பேணும் அத்தகைய உண்ணதமான சுதந்திரத்தை நமக்காக வருந்தி வாங்கிக்கொடுத்த தியாகச்செம்மல்களுக்கு இந்நாளில் தலைதாழ்த்தி நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். முன்னோர் நமக்கருளிய இச்சுதந்திரத்தை இந்நாளைப்போல் எந்நாளும் கொண்டாடுவோமாக, பேணுவோமாக.

வியாபாரியாக வந்த மேற்குலக கொக்குகள் இருக்க இடம் கேட்டு, பின்பு கால்நீட்டி படுத்து, விலையாகிப்போன ராஜாக்களை ம-குடிப்பாம்பாக அடக்கி, நம்மிலேயே பிறந்த எத்தர்களை எளியவர்களின் எஜமானர்களாக்கி, அடிவருடிகளை அகங்கரம்மிக்க ஆண்டேகளாக்கி, ஜாதிவெறி பிடித்த ஜமின்களாக்கி, உழைக்கும் வாரிசுகளை ஊமைகளாக்கி, அவர்தம் உழைப்பை அட்டையென உறிஞ்சி உறிஞ்சி சுகபோக வாழ்க்கை வாழ்ந்த அந்த வேற்றுலக பிராணிகளை கத்தியின்றி ரத்தமின்றி விரட்ட விவேகமாக மிதவாதத்தை கையிலெடுத்த காந்திபுரத்தாரும், இரத்தம் குடிக்கும் அட்டைகளுகென்ன இரத்த தானமென சித்தம் தெளிந்த சுபாஷ், எதிரி ஏந்திய அதே கருவியேந்தி தீவிரவாதி என இகழப்பட்டு சில தலை எடுத்து, பல தலை கொடுத்து, விடுதலை வேட்கையோடு போராடி, ஒருவழியாய் பழம்தின்று கொட்டை சப்பிக்கொண்டிருந்த வெள்ளை கிழங்கள், மிச்சத்தை சுதந்திரமென காந்தியார் கையில்கொடுத்து காணாமல்போன 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள்முதல் இந்நாள்வரை, சுதந்திரநாளன்று குழந்தைகள் "ஜன கண மன" பாடிமுடிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் நெகிழ்ந்து, கண்ணீர்முட்ட, புல்லரிக்க தன்னிச்சையாக எழுந்து "ஜய ஜய ஜெயகே" என நாமும் பாடிமுடிக்கிறோம்.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பதைப்போல் அவரவர் நாட்டிற்கு அவரவர் சுதந்திரநாள் உணர்சிபொங்கும் ஒரு உன்னத திருநாளே, அத்தகைய நம் இந்திய சுதந்திரநாளை கொண்டாடும் அதே வேளையில், தெற்காசிய வல்லாதிக்க இசை நாற்காலி போட்டியில் இலங்கையில் அமர்வதற்கும் , பழைய பகை தீர்ப்பதற்கும், இலங்கை இனவெறி ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான, நம் தாய்மொழி தமிழ் பேசும் ஈழத்தமிழ் இரத்த உறவுகளின், சுதந்திர மீட்டெடுப்பு போராட்டத்தை, முன்னெடுத்துச்சென்ற தமிழீல விடுதலை புலிகளின் யுக்திகளை, இலங்கை இனவெறி ராணுவத்திற்கு ரேடார் மூலம் காட்டிக்கொடுத்து, இன்னும் பல கொலைக்கருவிகள் அவர் வாங்கிகுவிக்க பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்து, நமது வரிப்பானத்திலேயே நம் இரத்த உறவுகளுக்கு வலைபின்னி, பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்து, அவர்தம் விடுதலை போராட்டத்தை அடியோடு அழித்து, மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து, அடிமைப்படுத்தி, இன்று தனது 62-வது சுதந்திரநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் எனது இந்திய திருநாட்டை நினைக்கும்போது நம் நெஞ்சு பதறுவதும் நிதர்சனமே.

தன் நாட்டு மக்களின் பாதுகாப்பான, சுகமான வாழ்கையின் பொருட்டு, மாற்றானின் சுதந்திரத்தை களவாடிய கீழான செயலை செய்த ஒரு நாட்டின் குடிமகனாக இந்தநாளில் சிறுமை அடைகிறேன். அத்தகைய வாழ்க்கை பழக்கமில்லை எம் முன்னோருக்கு. நம் மறத்தமிழன் மானத்தையும், அதற்கு பொருந்தும் இந்தியத்தையும் தலைகொடுத்தேனும் அல்லது வழி தவறும் வலியோரின் தலைஎடுத்தேனும் காப்போமாக.

ஈழத்தமிழர் மட்டுமல்ல இன்னும் பல இனங்கள் இப்பூமிப்பந்தில் ஏதேனும் ஒரு வகையில் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றன, அவர்தம் அடிமைத்தலை நீக்கி விரைவில் வெளிச்சம் கண்பார்களாக, நாம் அவர்தம் விடுதலையை ஆமோதிக்கும் மனம் பெறுவோமாக.

சுதந்திரம், ஒவ்வொரு உயிரின் பிறப்புரிமை.
மறுப்பதும், தடுப்பதும் உயிரியளுக்கெதிரான குற்றங்கள்.
நம் சுகத்தைவிட, மாற்றானின் சுதந்திரம் முக்கியமானது.
கருத்தில்லேற்போமாக, கவனம்கொள்வோமாக.

இந்தநாள் போல் எந்தநாளும் போற்றுவோம் சுதந்திரத்தை பேணுவோம் மனிதத்தை.

வாழ்க இந்திய சுதந்திரம்.
--
சாவண்ணா மகேந்திரன்.