திங்கள், டிசம்பர் 13, 2010

அடுத்து என்ன செய்ய ....?

வீரம் மட்டுமல்ல விவேகமும் பேசுங்கள் உறவுகளே ...

நாம் கத்தியை தீட்ட தீட்ட எதிரி புத்தியை தீட்டுகிறான்,
தன் சக்தியை கூட்டுகிறான்..
அவன்  தன் உக்தியை மாற்றுகிறான் ...

கவனிக்க...
ஆம்,  கருவி உருவுவோம், கருவி உருவுவோம்
மக்கள் நலன் கருதி உருவுவோம்..

ஓங்கி அடிப்போம் எதிரி தலையில்
சம்மட்டியாலும், சமபுத்தியாலும் ...!

நம்செயலில் நிசமிருப்பதுபோல்
நியாயம் இருக்க செய்வோம் ...

ஆகையால்,
நிர்வாணமாக்கப்பட்ட நமக்கு தேவை நிதானம் ...
நிர்மூலமாக்கப்பட்ட நாக்கு தேவை நிதி மூலம் ...
வன்னிமண்ணில் நமக்கு தேவை தமிழ் வாண்டுகள்..
புத்தம் புதிய புலிக்குபிறக்கும் பூண்டுகள்..
இருபதாண்டுகளில் தேவை இரண்டு லட்சம் வேங்கைகள்..
வழிநடத்த, வணிகம் செய்ய, வரைமுறை படைக்க..

பெறுவோம் தெருவெங்கும் பிள்ளைகள் பத்து...
தேடுவோம் உலகெங்கும் அவைகளுக்கு சொத்து..
தருவோம் அவைகளுக்கு உணர்வும் ஊக்கமும்...

அடுத்து..
நாம் முடுக்க வேண்டியது ஈழத்தில் மூலதனம்...
நம் முடக்க வேண்டியது காடையரின் மூளைத்தனம்..
பத்தாண்டுகளில் பாதி வணிகம் ஈழத்தமிழன் தமிழன் கையில்...
பாதி  இலங்கை சொத்து உலகத்தமிழன் தமிழன் பையில்..
முடியாத வேங்கைகளை வளர்த்த வெளிநாடுவாழ் தமிழனுக்கு..?

அறுபது ஆண்டுகளில் கிட்டாத சுதந்திரம்,
இருபது ஆண்டுகளில் கிட்டும்,
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..

திங்கள், டிசம்பர் 06, 2010

மழைத்தவளையாய்....கவிதைகள் பாகம் 3

நீதி மனு:
ஆறாம் வகுப்பில் அதிசயித்து,
ஏழாம் வகுப்பில் எட்டிபிடித்து,
எட்டாம் வகுப்பில் கூட்டாளியாகி,
ஒன்பதாம் வகுப்பில்  ஒன்றாய்படித்து,
பத்தாம் வகுப்பிலும் என்னை முந்திவிட்ட,
என் பால்ய வகுப்பறை தோழன்,
பழகியதொழில் செய்து பிழைக்கிறான்,
பட்டப்படிப்பிற்கு பணமில்லை என்பதாலும்,
பாட்டன்பெயர் பார்த்தசாரதி என்பதாலும்.

சந்தனச் சாணி:
வலியவன் கூட்டம் வாரியள்ளி பூசியது
சந்தனமும் சவ்வாதுமாய்,
எளியவன் நானுமள்ளி பூசினேன்
நாறியது நாய்விட்டையாய் சாதி ...

காந்தியும் கருவியும் ...

எம்மினம்காக்க ஏந்துவேன் எக்கருவியும்
காந்தி சொன்னார்
சிலை வைத்தார்கள்,

அவ்வினம் காக்க அவர் பேரன்
கத்தி  சொன்னான்
சிறை வைத்தார்கள் ...


வேங்கைகளும் ஆடுகளும் ...

கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியான்கிட்ட 
மணிக்கணக்கா  மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள்  வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை
வேங்கைகளின் சுரணையும் சுதந்திரமும்  ...!

சனி, அக்டோபர் 16, 2010

காங்கிரஸ் ஆட்சி, காமராசர் ஆட்சி, கக்கன் ஆட்சி ...

ஒருதரம், இரண்டுதரம், மூன்றுதரம் என்று ஏலம் போடதகுறையாக காங்கிரஸ் கட்சி ஊரூராக  "தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி, காமராசர் ஆட்சி, கக்கன் ஆட்சி ..." என்று முழங்கியும் முனங்கியும் திரிந்தவண்ணம் இருக்கிறார்கள். ஓட்டுபோடும் மக்கள் ஒருவரும் பெரிதாக இதுபற்றி சிந்திப்பதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை. இருப்பினும், திடீரென்று செத்துப்போன கக்கனையும் காமராசரையும் தோண்டியெடுத்து வந்து பூஜிப்பதும், புல்லரிப்பதும் அடுத்த தேர்தளிலுள்ள அளவுகடந்த ஆசையின் காரணமாகத்தான் என்பது வெட்டவேளிச்சதில் கொட்டமடித்தாலும், தமிழக காங்கிரஸ் கங்காணிகள் வக்கணையாய் வாயிலேயே பொங்கல் கிண்டுகிறார்கள் வாக்காளனுக்கு.  இந்தமுறை எப்படியாயினும் எதைவித்தேனும் வரும் தேர்தலில் தேனும் தினைமாவும் தின்றுவிட தூண்டிவிடுகிறது காங்கிரஸ் தலைமை, எந்த திறமையும் தகுதியும் இறையாண்மையும் இல்லாத தமிழக காங்கிரஸ் கைத்தடிகள் ஆண்மைமிக்க கக்கனையும் காமராசனையும் களமிரக்குரார்கள் கையாலாகத்தனமாக.

 காமராசரை விடுங்கள், அவ்வப்போது சில மேடைகளில் சில  காங்கிரஸ் தலைவர்கள் காமராசர் பெயரை உச்சரித்ததுண்டு. ஆனால், இவர்கள் மருந்துக்கும் நினைவில்கொள்ளாதிருந்த கண்ணியவான் கக்கனை இன்று கொண்டாடுவதும் , நாம்முன் கொண்டுவருவதும் ஒரு மலிவான அரசியல் சூழ்ச்சியே. கிள்ளுக்கீரையாக தள்ளிவைக்கபட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை  உறிஞ்ச இந்த ஓநாய்கள் போட்டிருக்கும் திட்டம்.   அதிலொன்றுதான், தலித்துகளின் கூரைக்குள் தலைவர் ராகுல், சமபந்தி சாகசம் - அலங்காரம் செய்கிறது அரசியல், ஆச்சரியம் காட்டுகிறது தலைப்பு செய்தி;  இவையெல்லாம் மறைமுகமாய் மீண்டும் உறுதிபடுத்துகிறது அவன் கீழானவனென்று  இருப்பினும்  புரியாத வெள்ளந்தியான  மக்கள். அவர்தம் வாக்குகளை அபகரிக்க, அந்த  மக்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என இவர்கள் அப்பன்வீட்டு பணத்தில் செய்ததைபோலே, அரசாங்க பணத்தில் செய்ததை சொல்லிக்காட்டி பிழைக்கும் கட்சிகளின் வரிசையில் இவர்களும் இடம்பிடிக்கிரார்கள். எதைசொன்னால் ஓட்டு கிடைக்கும், எப்படி சொன்னால் ஓட்டு கிடைக்கும் என்று சிந்திக்கும் இவர்கள் போன்ற அரசியல்வாதிகளுக்கும், துணி இறக்கி நிற்கும் இரவுநேர ரம்பைகளுக்கும் என்ன வித்தியாசம்.

கக்கனை வழிகாட்டியாக வைத்து அரசியல் நடத்துகிறோம் என்று வாய்மொழியும் நிலையில் தகுதியில் இன்றைய காங்கிரஸ் வட்டாரத்தில் ஒருவருமில்லை. காமராசரின் ஆட்சியை இலக்கணமாக வைத்து ஆட்சி நடத்துவோம் என கூறி நடத்திக்காட்ட அறிவுள்ள, அழகுள்ள, ஆண்மையுள்ள ஒருவரேனும் இன்றைய காங்கிரஸ் வட்டாரத்தில் உண்டா? சுயமரியாதையோ, சுய சிந்தனையோ, இனமானமோ, தன் மொழி உணர்வோ, சுய மாநில விருப்பமோ, தன் மக்கள் நலமோ, கலாச்சார பாதுகாப்போ, சூடோ, சொரனையோ எதுவுமோ இல்லாத இன்றை காங்கிரஸ் கட்சியில் எவருக்கு தகுதியிருக்கிறது அடுத்த கக்கனாக,  அடுத்த காமராசராக வாழ , ஆள . இவர்களால், மைய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கங்காணி வேலைதான் செய்யமுடியும், வெளிநாட்டு வேம்புக்கு வெஞ்சாமரம்  வீசத்தெரியும்... கொள்ளிக்கட்டையை எடுத்து தலைசொரிய தெரியும்... தங்கமென்பதற்காக ஊசி எடுத்து தன் மக்களுக்கே தார் வைக்க தெரியும்... வேறென்ன தெரியும் இந்த வீனர்களுக்கு.

 ஜவகர்லால் நேரு தொடங்கி, இந்திராகாந்தி வந்து, ராஜீவ்காந்தி தொடர்ந்து, இப்போது அவர் மகன் ராகுல்காந்தி பிரதமராக இவர்கள் உழைக்கிறார்கள் ராவும் பகலும் - இவர்கள் அதில் பெறுவது வீரத்தளும்போ அல்லது வெறும் எழும்போ.. பாராளுமன்றத்தை அந்த ஒரு குடும்பத்திற்கு கொடுப்ப்திலேன்னவோ அவ்வளவு சுகம் காண்கிறது இந்திய சமுகம். மழுங்கிய மூளைகளுக்கு, இதுதான் மக்களாட்சியோ? 

வேடிக்கையாக  தோன்றுகிறது, சுதந்திர  போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மோதிலால் நேரு கொடுத்த பங்களாவின் பொருட்டு, இந்தியர்கள் பாராளுமன்றத்தையே  நேரு குடும்பத்திற்கு கொடுத்துவிட்டார்கள் என்று.


வெறுப்போடு வேதனையில் ஒரு கவிதை...

ஆட்சியாளன்,
நம்  பாட்டனுக்கு அவன் பாட்டன்,
நம் தாத்தனுக்கு அவன் தாத்தன்,
நம்  அப்பனுக்கு அவன் அப்பன்,
நமக்கு  அவன்,
இன்றைக்கும் ஆளும் அவன் வாரிசுகள்,
என்றைக்கு ஆளும் நம்  வாரிசுகளும்...?


என் கருத்தோடு காங்கிரசுவிற்கு ஒரு விண்ணப்பம்..

காங்கிரஸ் தோழர்களே...
உண்மையோடும் , உரிமையோடும்  ஊருக்குழைக்க உணர்வுமிக்க
ஒருவரை காட்டுங்கள் அல்லது கட்டுங்கள் என் தமிழ் சாதிக்கு முன்,
கக்கன் காமராசு என்ற கடவுள்களை காட்டி காரியம் சாதிக்கும்முன்...
தன் மக்கள் நலமும் மானமும் நித்தியமென நெத்தியிலேற்றுங்கள்,
மொழியும் இனமும் உணர்வும் சத்தியமென புத்தியை மாற்றுங்கள்,
பெரும் சேவையே தரும் பெரும் சாவையும் கக்கனைபோல், காமராசனைபோல்...

நிசம் புரிவீர்களா, நலம் புறிவீர்களா?
--

திங்கள், அக்டோபர் 11, 2010

அவரும் அவனும் 2.0

கல்லுக்கும்  மண்ணுக்கும் மூத்த நம் தாய்த்தமிழை வளர்க்க, சங்கம் வைத்து பட்டி தொட்டிகளை எல்லாம் பைந்தமிழ் பாசறைகலாக்கிய காலம் தொட்டு  கலிபோர்னியாவில்  "தமிழ் அகடமி" வைத்து மொழிவளர்க்கும் முதிர்ச்சியுற்ற இக்காலம் வரையிலும் தமிழ் மொழிப்பாடத்தில் சமூக மேம்பாடு குறித்து பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை போலும்; தமிழ் எழுத்துவடிவ வளர்ச்சி மற்றும் பெரியார் செய்த சில வடசொல் நீக்கம் தவிர.

ஆம் தோழர்களே, ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் பாடநூல் ஆசிரியர்கள் விட்ட குறைகள் இன்றுவரை தொடர்வதுகண்டு வலியோடு எழுதுகிறேன்  என் வருத்தங்களை தெரிவிக்க சில மாற்றங்களை வருவிக்க...

அதாவது,  இன்றும் எழுத்திலும், பேச்சிலும் "மளிகை கடைக்காரர்" என்றும் "மாட்டு வண்டிக்காரன்" என்றும் ஏற்றத்தாழ்வை இன்னும் தொடர்கின்றோம். செய்யும் தொழில் சார்ந்து, குலம் (குளமும்) பிரித்து, மதில்கட்டி, மதிப்பளித்த மடமையை இன்னும் தொடர்கிறோம். ஒரு சிலரை தவிர, பெரும்பான்மையான மக்கள் இதுபற்றி சிந்திப்பதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை. ஆகையால், சாக்கடையைபோல, குப்பையைபோல, அசிங்கமான - அழகற்ற சொற்கள் தெருவில் குவிகின்றன...நோயை பரப்புகின்றன...

வெறுமனே வருமானத்திற்காக படைப்பாளிகள் செய்யும் துரோகம் மட்டுமில்லாமல், இக்குறை கல்வியிலும் தொடர்வதுதான் வேதனை. மேலும் சில கல்வி சார்ந்த ஊடகங்களிலும் இக்குறை காணப்படுகிறது. இக்குறை தென்படுபோதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களை நாம் அணுகியிருக்கிறோம். நீங்களும் ஆவன செய்வீர்களாக...

பேச்சு தமிழிலும், எழுத்து தமிழிலும் மரியாதையை குறிக்க அல்லது குறைக்க அவர், அவன், அவள் என்ற சொற்களை பயன்படுத்துவது இலக்கணம். இடம், பொருள், ஏவல் பொறுத்து அதை பயன்படுத்த நாம் கற்றுகொள்ள வேண்டும், அடுத்த சந்ததியினருக்கும் கற்றுதரவும் வேண்டும். குறிப்பாக பாடநூல்களில் மரியாதையான சொற்களே இடம்பெற வேண்டும். மகத்துவமற்ற வாக்கியம்யாவும் வழக்கொழிக்கப்பட வேண்டும், வருங்கால சந்ததியினர் வாய்மணக்க பேசவேண்டும், வள்ளுவன் புகழாய் வாழவேண்டும்...

அவரும் அவனும்
============
செய்யும்  தொழிலே தெய்வம் என்று தொல்தமிழ் கூறிநிற்க,
குணம் கெட்டு நாமும் அதை குலம்பிரித்து மதிப்பளிக்கலாமோ...
தமிழ் போதை ஏற்றும் எழுத்தினிலே பேச்சினிலே மனித பேதம் ஏற்றி பேசலாமோ...
தமிழ் பேதையர் தம் அறிவினிலே தவறான சொல்லேற்றி வைக்கலாமோ..
குலமேற்றும் குழந்தையர் தம் மனதினிலே குலம்பிரித்து வைக்கலாமோ...
அழகான குழந்தையினுள் அழகற்ற சொல் எதற்கு?
அறிவான குழந்தையினுள் அறிவற்ற சொல் எதற்கு?
அவர் இவர் என்ற அலங்கார சொல்லெல்லாம்
அழகென்போம், அறிவேன்போம்...
அவன் இவன் என்ற அகங்கார சொல்லெல்லாம்
அழிவென்போம், இழிவென்போம்...


நம்மை பொறுத்தவரை, மானசீக  மரியாதையுடன் திருப்புகழை மட்டுமல்ல தெருப்புளுவை பாடும்போதும் வாய் மணக்கும்...

(முன்பு எழுதிய சமத்துவபுர கவிதை ஒன்று..)

சமத்துவபுர கவி
==============

சமத்துவம் ஓதும் கவிஞன் நான் - அதை
போற்றி தொடுத்தேன் கவிதைஞான்
வந்து விழுந்தன ஒரேவரியில்
கவித்துவமான நல்வார்த்தைகளாய்
மளிகைக்கடைகாரரும்
கைவண்டிகாரனும்.

வருங்காலம் வண்ணங்களாகட்டும், வர்ண வாக்கியங்கள் வழக்கொழிந்து போகட்டும்...

--

வெள்ளி, மார்ச் 26, 2010

மகனே வா... மறுபிறப்பே வா...

மகனே வா,
மறுபிறப்பே வா,
இயற்கை  எனக்களித்த
இன்னுமொரு வாய்ப்பே வா,
எழியவன் என்வழி வந்த
வலியவனே வா,
இனப்பெருமை ஏற்ற வந்த,
இன்னுமொரு  புலியே வா,
இடிதாங்கினும் இனம்காக்க
மடிதங்கியவனே வா,
எம்பேர் சொல்லவந்த
எம்பெருமானே வா,
எளியவன் நான் பிந்தும்
எல்லைகள் வெல்பவனே வா,
பெத்தவன் நானேந்தும்
பேராயுதமே வா,

எங்கப்பனிட்ட கட்டளைகள்
உங்கப்பனிடுகிறேன் கேள்,
மகனே கேள்,
மனிதராய் பிறந்தவர் பலர்,
மகானாய் இறந்தவர் சிலர்,
என் மகனாய் சென்று வா,
என் மகான் சிலர் வென்று வா....

அகிம்சையால் வென்ற காந்தியை,
அறிவியலில் வென்ற அயின்ஷ்டீனை,
ஆன்மிகம் வென்ற விவேகனை,
ஆசைகள் கொன்ற புத்தனை,
இலக்கியம் படைத்த கம்பனை,
இமயம் தொட்ட வரம்பனை,
ஈகையில் வென்ற தீரசிபியை,
ஈழத்தில் நின்ற வீரப்புலியை,
உண்மையை பேசிய சந்திரனை,
உரிமையை பேசிய சாகிப்பை,
ஊருக்கு உழைத்த  காமராசனை,
ஊமைக்கு  உரைத்த  ஈவேராவை,
எவனையும் கெஞ்சாத அம்மானை,
எமனையும் அஞ்சாத பொம்மனை,
ஏழையாய் வலம்வந்த கக்கனை,
ஏகாதிபத்யம் எதிர்த்த காரலை,
ஐயமற உரைத்த ஒளவையை,
ஐதீகம் உடைத்த லிங்கனை,
ஒளிகொண்ட புலவன் பாரதியை,
ஒப்பற்ற உரையாளன் அண்ணாவை,
ஒதிச்சென்ற அய்யன் வள்ளுவனை,
ஒளவை படைத்த ஆத்திச்சுடியை,
வென்றுவா.

இவரில் எவரேனும் வென்றுவா,
இல்லை இவர்பலரை தின்றுவா
என்தவம் தான்செய்தான்  இத்தந்தை 
எனும் இன்பமதை தா.

இந்நெறி நீ நன்செய்தால்.. 
இருக்கும்போதே எம்பேர் சாகும்,
இல்லாதபோதும் உம்பேர் வாழும்...


--
சாவண்ணா மகேந்திரன்