புதன், செப்டம்பர் 28, 2016

மழைத்தவளையாய் ....பாகம் 9


அதுங்க 
பொறந்து வளர்ந்து 
உருண்டு புரண்டு 
வளர்ந்து நடந்து 
படித்து பட்டு 
அறிவில் வளர்ந்து சிறந்து
பொருளில் வளர்ந்து உயர்ந்து
உறவில் கூடி குழவி
கெஞ்சிக் கொஞ்சி
பெத்து வளர்த்து
மகிந்து குளிர்ந்து
வாழ்ந்து கழித்து
வருங்கால தலைமுறைக்கு
வக்கனையா இடம்விட்டு
சொர்க்க வாழ்க்கையை
சுகமா இழக்கிறதுங்க
அதுங்க எதுங்க ?


===========================

நட்சத்திரம் லட்சம் இருக்கலாம் 
ஆனா நிலா ஒண்ணுதானே என்று 
காதலி முகம்பார்த்து கவிதை சொன்ன முதல் மனிதனுக்கு
ஒரு ஒரு நட்சத்திரமும் ஓராயிரம் நிலாவை 
உள்ளடக்கியதுன்னு தெரிஞ்சிருக்குமா
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?


==============================


பூமியில...
மொழிச்சண்டை
இனச்சண்டை
இடச்சண்டை
போட்டு
பழகி
முத்தி
முதிர்த்து
முன்னேறி
இப்போ
வானம்
அண்டம்
பேரண்டம்
நோக்கி
அறிவுச்சண்டை
போட்டுக்கிட்டு இருக்காங்கே அவெங்கே...

நமக்குத்தான்
ரெண்டாயிரம் வருசமா
எளவு இந்த இலைச்சண்டையை தாண்ட வரமாட்டேங்கிது...!

============================
பல வருசமா பழகிவிட்ட, முழுவதும் நம்பிவிட்ட ஒரு கூற்றை தாண்டி அதுக்கு எதிரான ஒரு கூற்றை பாரபட்சமின்றி அலசமுடிந்தவன் பாக்கியவான்.

===========================
இயற்கை உனக்களித்த சதைமுகம் போக, இனிவரும் உலகம் படிக்கப்போகும் உன் கதைமுகம் என்னவென்று இப்போதே யோசித்துவை இளைஞனே.

===========================
அறிவுசார்ந்த காரணங்கள் எதுவுமில்லை என்றாலும், உங்க ஆளுக என்ற ஒரே காரணத்துக்காக உப்புசப்பில்லாத விசயங்களுக்குகூட வரிந்துகட்டிக்கொண்டு வாயதடிப்பதில் தெரிவது உங்கள் கொள்கை பிடிப்பு மட்டுமல்ல உங்கள் கோழைத்தனமும்தான்..!

==========================
ஏன் நாம் தமிழராய்..?

தாய் தந்த மொழி காக்க
மொழி தந்த குணம் காக்க
குணம் தந்த இனம் காக்க
இனம் வாழும் நிலம் காக்க
நிலம் வாழும் உயிர்கள் காக்க
உயிர்கள் பேணும் உரிமை காக்க
உரிமை காணும் சந்ததி காக்க
சந்ததி கற்கும் சமத்துவம் காக்க
சமத்துவம் தரும் சமாதனம் காக்க
சமாதனம் கொணரும் சந்தர்ப்பம் காக்க
சந்தர்ப்பம் வகுக்கும் சாதனை படைக்க
சாதனை மூலம் உலகில் வேதனை துடைக்க
வாருங்கள் உறவுகளே,
அணிதிரள்வோம்
அருள்பெருவோம்
வழியமைப்போம்
வாகைசூடுவோம்
ஆட்சியமைப்போம் 
ஆவனசெய்வோம்...

                    -- சாவண்ணா மகேந்திரன் 
==========================


மழைத்தவளையாய் ....பாகம் 8

சிங்கங்களே... சொல்லுங்களேன்
-------------------------------

தமிழ்ச் சிங்கங்களும்
கன்னடச் சிங்கங்களும்
களம் நகைக்கும் இந்த கழனிச் சண்டையில்
சுழற்றும் வாள்வீச்சில்
வெட்டப்படுவது
வெகுளிப்பய வெள்ளாடுகளாயிருப்பது ஏனோ?
சிங்கங்களே கொஞ்சம் சொல்லுங்களேன்.
     -- சாவண்ணா மகேந்திரன்


ஓர் மொழிக் குடும்பமும்
ஒருவனுக்கொருவன் அடிச்சிக்காம
ஒத்துமையா வாழ்ந்துவிட்டால்
உலகம் கையிமேல மூக்கை வச்சு
கதைகதையா பேசி படிக்கும்
அடிச்சிக்க ஆளில்லாத
ஆயிரம் யுகம் கண்ட
உங்கப்பனோட வரலாறும்
எங்கப்பனோட வரலாறும்.

     -- சாவண்ணா மகேந்திரன்

அப்படி என்ன பகை உனக்குள்
சொந்த ரத்தம் சிந்தக்கண்டும்
பந்த உணர்வு கொள்ள
பதைக்காத இதயம் கொண்ட
பிறப்பா நம் பெரும் பிறப்பு ?




-- சாவண்ணா மகேந்திரன்



காவேரி கடவுளின் குழந்தை
கரையோர உயிர்களின் தாய்
கன்னடனும் தமிழனும் கண்விழிக்கும் முன்னே
குரங்குகளாய் குதியாட்டம் போட
கடல்நோக்கி  நதியாட்டம் நடந்தவள்
அற்பப்பூச்சிகளின்  சதியாட்டம் கடந்தவள்
வாடிய உயிர்களின் வயிற்றினுள் பாய்ந்தவள்
வம்சங்களனைத்தையும் வருடி வளர்ந்தவள்
வாழ்வினை படைத்தவள் வளர்ச்சியை கொடுத்தவள்
வறுமையை ஒழித்தவள் வறட்சியை கழித்தவள்
தெற்கே பிறந்த தெருவோர பூசிக்கும்
தேனாய் இனித்தவள் தானாய் நனைத்தவள்
இயற்கை அவளை அப்படி படைத்திருக்க
யாரடா நீ இடையில் தடைபோட
எவ்வூரடா நீ என் இலையில் மடைபோட
ஏடா மனிதா இதுவோ உம் பெருந்திறமை
எல்லோருக்கும் பொதுவில் வைத்த
இறைபொருளை எனதென்பாயோ
எடடா உன் குடிமறையை
எழுதப்பட்ட வரைமுறையை
இன்னொருமுறை வாசித்துப்பார்
இனியேனும் யோசித்துப்பார்
பூச்சி புழு குரங்குதாண்டிய நீ நான் யார் என்று.

-- சாவண்ணா மகேந்திரன்

அதைச்  செய்யாதே
இதைச் செய்யாதே
என்று அன்போட அடக்கிவைத்து
துன்பமில்லா நல்ல பண்போடு வாழ
வழிசெய்தவர் அவர்,
எதையும் கேள்விக்குள்ளாக்கு
இயற்கையையும்  மீறு
எல்லாமும் பழகு
இனியொருமுறை உலகை படை
என எகிறிக் கேட்டவர் இவர்,
இதில் எங்கே உமக்குச் சுவர்?

  -- சாவண்ணா மகேந்திரன்

அவனையும்
எவனையும்
மட்டும்மல்ல
கேட்க்கும்
இவனையும்
கேள்விக்குள்ளாக்கும்
இறைவனாய் வா
இளவலே!
    -- சாவண்ணா மகேந்திரன்